டெல்லிக்கு அடிபணிந்து விடக்கூடாது என்பதில் புல்லட்சாமி உறுதியாக இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாவட்டம் ஒன்றில் அசைக்க முடியாத இரு துருவங்களாக செயல்பட்டவங்க ஒண்ணு கூடியதால பகல் கனவோட இருந்த எதிரணியான இலை தரப்பு விரக்தியின் உச்சத்திற்கு போயிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘புரம் மாவட்டத்தில் இலை கட்சியில் பிளவுகள் அதிகரித்துள்ள நிலையில் தேர்தல் வெறுப்பில் மூத்த நிர்வாகிகள் இருக்காங்களாம்.. கூட்டணி கட்சிகளின் எல்லா கெடுபிடிகளுக்கும் இலை தலைமை இணங்குவதால்தான் தொண்டர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஸ்பெஷல் டீம் மவுனம் எப்ப கலையுமோ என காக்கிகள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல ஆலத்துல தொடங்கி காயத்துல முடியுற ஊர் இருக்குது.. இந்த ஊர்ல 2 ஸ்டார் காக்கி ஒருத்தரு பணிபுரிஞ்சு வர்றாரு.. இவரு சில நாட்களுக்கு முன்னாடி குற்றவாளிகளோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட்டத்துல ஈடுபட்டிருக்காரு.. இந்த கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்கள்ல பரவி ஏஆருக்கு மாற்றப்பட்டாரு.. இவரோட கொண்டாட்டம் மட்டும் தான், வெளிய வந்திருக்குது.. இதுபோல மாவட்டத்துல மிஸ்டர் பத்தூர், வாணிபாடி ஊர், பிரியாணி ஊர், பள்ளி என்று முடியுற ஊர் என்று பல்வேறு ஊர்கள்ல இருக்குற காக்கிகள் பலர் குற்றவாளிகளுடன் தொடர்புல இருக்காங்களாம்.. மணல் திருட்டு, பஞ்சாயத்துன்னு செய்ற நபர்களோட பைக்குலயே ஒன்னா, உட்கார்ந்துட்டு போறாங்களாம்.. இதனால், யாருக்கு யாருடன் தொடர்போ தெரியலையேன்னு, புகார் தெரிவிக்க ஜனங்க அச்சப்படுறாங்களாம்.. இதையெல்லாம் மாவட்ட உயர் காக்கிக்கு தெரிவிக்க வேண்டிய, ஸ்பெஷல் டீம் மவுனம் காத்து வர்றாங்கன்னு, காக்கிகள் வட்டாரத்துல இருந்தே மவுனத்தை கலைச்சிருக்காங்க.. ஸ்பெஷல் டீம் மவுனம் எப்ப கலையுமோ தெரியலை..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடைகளை ஒதுக்கும் விவகாரத்தில் விரக்தியில் இருக்காங்களாமே யூனியன் வியாபாரிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலா நகரங்களில் சிறந்த யூனியனில் சுமார் 30 கோடியில் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டதாம்.. இவ்வளவு பணம் செலவிட்டும் இத்தனை வசதிகள்தானா என உள்ளூர்வாசிகளின் முணுமுணுப்பு எழ பல்வேறு முட்டுக்கட்டைக்குப் பின் திறப்பு கண்டதாம்.. ஆனாலும் உணவகம் உள்பட 34 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்குவதில் ஆளும் தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டதாம்.. ஏற்கனவே கடை நடத்திய 16 பேருக்கு ஒதுக்கிவிட்டு மீதியை பொது ஏலம்விட முடிவு செய்யப்பட்டதாம்.. இதற்கு எதிராக நடுநிலை நபர் ஒருவரோ, திடீரென பொதுநல வழக்கு தொடுக்க அனைத்து கடைகளையும் ஏலம்விட உத்தரவு வெளியானதாம்.. ஒருவழியாக மின்னனு ஏல அறிவிப்பை தற்போது நகராட்சி வெளியிட முன்வைப்பு தொகையை செலுத்தி அடுத்த 5ம்தேதிக்குள் விண்ணப்பத்தை கொடுத்திடுமாறு அறிவுறுத்தி உள்ளதாம்.. இதனால் ஏற்கனவே கடை நடத்திய வியாபாரிகள் கடும் விரக்தியில் இருக்கிறார்களாம்.. இதனால் எந்த நேரத்திலும் போராட்டம் வெடிக்கலாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தலில் சீட் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் மாஜி அமைச்சரை ஐஸ் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராமே மற்றொரு மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளாராம்.. ஆனால், அவருக்கு சீட் கிடைப்பதில் பெரும் சிக்கலாக உள்ளதாம்... இதையறிந்து கொண்ட மாஜி அமைச்சர், கட்சியில் பவுர் புல்லாக இருக்கும் மற்றொரு மாஜி அமைச்சரான மணியானவரிடம் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாராம்... முக்கியமாக, மணியானவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு இல்லாமலேயே மாஜி அமைச்சர் தானாகவே சென்று கலந்துகொள்கிறாராம்.. ஆனாலும், மாஜி அமைச்சர் மணியானவர், அவரை கண்டுகொள்வது கிடையதாம்.. இந்த டாப்பிக் தான் கடலோர மாவட்டம் முழுவதும் அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முதுகுவலி என்று சொல்லி ஒன்றிய விழாவுக்கு கூலாக கல்தா கொடுத்துவிட்டாராமே புல்லட்சாமி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரசியல் சதுரங்க விளையாட்டுகள் அசால்ட்டாக அரங்கேறும் தென் யூனியனில் தேர்தல் ஜுரம் பற்றி விட்டதாம்.. கூட்டணி குழப்பங்கள் ஆளும் தரப்பில் ஒருபுறம் அரங்கேற டெல்லி பிடியில் சிக்கி விட்டாராம் தொழிலதிபர்.. மாஸ் நடிகருக்கும் பிடி இறுகியுள்ள நிலையில், தாமரையின் அழுத்தத்திற்கு முழுமையாக அடிபணிந்து விடக்கூடாது என்பதில் புல்லட்சாமி உறுதியாக உள்ளாராம்.. இதன் பிரபலிப்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறாராம்.. நேற்றைய தினமோ ஒன்றிய அமைச்சர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற, முதுவலி காரணமாக வர முடியல்லப்பா... என கூலாக கல்தா கொடுத்தாராம் புல்லட்சாமி.. ஒருவழியாக யூனியன் நிர்வாகியை வைத்து விழா நடத்தி முடிக்கப்பட்டதாம்.. ஆனால் சிறிது நேரத்தில் சபைக்கு சென்று அலுவலக பணிகளை கவனித்தாராம்.. விருப்பமில்லா கூட்டணி குறித்த தனது கண்ணோட்டத்தையே புல்லட்சாமி இப்படி பல வழிகளில் வெளிப்படுத்துகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிவில் பிரச்னையானலும்கூட என்கிட்ட தைரியமாக வாங்கன்னு கூவிக்கூவி அழைத்து பஞ்சாயத்து பண்ணுகிறாராமே காக்கி உதவி ஆணையர்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சென்னையின் நுழைவுப் பகுதியின் பக்கத்து பகுதியில் உதவி ஆணையராக இருக்கும் ஒரு மதத்தின் பெயரையும், மீனின் பெயரையும் கொண்டவர், கடந்த சில நாட்களாக சிவில் விவகாரத்தில் தலையிட்டு பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.. புகார் வந்தால் காவல்நிலையத்துக்கு அனுப்பாமல் கையில் ஒரு எஸ்ஐயை வைத்துக்கொண்டு அவரே நேரடியாக பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.. குறிப்பாக நில விவகாரத்தில்தான் அதிக பஞ்சாயத்தில் ஈடுபடுகிறாராம்.. இதுகுறித்து விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் இருக்காங்க.. சில சிவில் விவகாரங்களை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரே விசாரிப்பதில்லை.. நீதிமன்றத்துக்கு சென்று விடுங்கள் என்கிறார்களாம்.. ஆனால், இவரோ, எந்த பஞ்சாயத்து என்றாலும் என்னிடம் வாங்க.. குறிப்பாக சிவில் விவகாரம் என்றால் என்னிடம் வாங்க, நான் மேல் அதிகாரிகளை சரி கட்டி, பஞ்சாயத்தை முடித்துக் கொடுக்கிறேன் என்கிறாராம்.. இது எங்கு போய் முடியுமோ என்கின்றனர் புறநகர் மாநகர காக்கிகள்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


