Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டெல்லியில் நவம்பர் 1ம் தேதி காங்கிரஸ் பிரம்மாண்ட பேரணி: தமிழகத்திலிருந்து திரளாக பங்கேற்க மாணிக்கம் தாகூர் அழைப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களின் தொடர்ச்சியாக, ‘வாக்கைக் காப்போம்; நாட்டைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் டெல்லியில் நவம்பர் 1ம் தேதி வரலாறு காணாத பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வழிகாட்டுதலின்பேரில், பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பேரணிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், சிறப்பு தீவிர திருத்தம் நிறுத்தப்பட வேண்டும், தேர்தல் ஆணைய இணையதளத் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும், பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து சுயாதீன மறுஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட உள்ளன.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காங்கிரஸ் கட்சி தனது போராட்டத்தைத் தொடரும். தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். எனவே, டெல்லியில் நடைபெறும் பேரணியில் தமிழக காங்கிரசார் பெருந்திரளாகப் பங்கேற்று கட்சியின் வலிமையை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.