‘‘நல்ல காலம் பிறப்பதால் பொறுமையாக இருங்கன்னு ஆதரவாளர்களிடம் பழைய டயலாக்கையே சொல்லிக்கிட்டு இருக்கிறாராமே மாஜி அமைச்சர்..’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி மாஜி அமைச்சர் வைத்தியானவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த மாவட்டமான நெற்களஞ்சியத்திற்கு வந்திருக்காரு.. தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் வைத்தியானவரை நேரில் சென்று பார்த்து இருக்காங்க.. பொறுமையாக இருங்க.. நல்ல காலம் பிறக்கும்னு அவர்களிடம் வழக்கம் போல் பழைய டயலாக்கையே பேசி இருக்காரு.. அதோடு, எப்படி இருந்தாலும் களத்தில் கண்டிப்பாக இறங்குவோம் என கூறி அனுப்பி வைத்திருக்காரு.. கடலோர பகுதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்த வைத்தியானவர் அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.. ‘விட்டமின் ப’ அள்ளி வீசவும் அவர் முடிவு செய்திருக்காரு.. தற்போது இருந்தே தேர்தல் பணியை அவர் துவங்கியுள்ளாராம்.. இந்த டாப்பிக்கை தான் நெற்களஞ்சிய மாவட்டம் முழுவதும் அவரோட ஆதரவாளர்கள் அரசல்புரலசலாக பேசிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இறுகிய முகத்துடன் காணப்பட்ட இலைக்கட்சி மாஜி அமைச்சர் திடீர் சந்தோஷத்தில் சிரிச்ச முகமாகவே உலா வர்றாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொசுவலை மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர் தலைநகர் சென்று விட்டு திரும்பி வந்த நிலையில், எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருகிறாராம்.. முன்பு எல்லாம் இறுகிய முகத்துடன் தெரிந்த அவர், தற்போது புன்சிரிப்புடன் தொண்டர்களிடம் பேசி வருகிறாராம்.. சேலத்துக்காரர் தலைநகர் சென்றபோது, இவரும் தலைநகர் சென்றார். அப்போது, தலைநகரில் ஏதோ ரகசிய சந்திப்பு நடந்ததாம்.. இதில், பாசிடிவ் தகவல் கிடைத்ததாம்.. தொடர்ந்து, கொசுவலை மாவட்டத்திற்கு திரும்பிய அவர் புன்சிரிப்புடன் வருகிறாராம்.. மாஜி அமைச்சர் திடீர் சந்தோஷத்திற்கு என்ன காரணம் என்று தெரியாமல், அவருடைய ஆதரவாளர்களோ புலம்பி தவித்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கர்காரர் மலராத கட்சியின் பிரஷர், தொண்டர்களின் அதிருப்தியால் மதில்மேல் பூனையாக இருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராதக் கட்சியின் மேலிட பிரஷரால், இலைக்கட்சி கூட்டணியில் இணையும் முடிவை குக்கர் கட்சி தலைவர் விரைவில் எடுப்பார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுது.. ஆனால், கூட்டணியில் சேர்வதில் அவரது கட்சியினர் பலருக்கும் உடன்பாடு இல்லையாம்.. குறிப்பாக லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட குக்கர் கட்சியினர், தலைவர் அப்படியொரு முடிவை எடுத்தால் ஏற்கக்கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்களாம்.. சேலத்துக்காரரை, ‘துரோகி, அவர் முதலமைச்சர் ஆகவா நான் அரசியலில் பணியாற்றுகிறேன்’ என்றெல்லாம் வசைபாடி விட்டு திரும்ப அங்கே ேபாய் நிற்பதா? அதுவும் தாமரை மேலிடம் மிரட்டலுக்கு பயந்து, கூட்டணியில் இணைவது ரொம்ப கேவலம் என எண்ணுகின்றனராம்.. தொண்டர்களின் அதிருப்தியை அறிந்த குக்கர் கட்சி தலைவர் விழிபிதுங்கி நிற்கிறாராம்.. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனராம்.. இலைக்கட்சியில் இருந்தபோது மாவட்ட முக்கிய நிர்வாகியும், சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் முருக கடவுள் பெயர் கொண்டவரின் டார்ச்சர் தாங்காமல்தான் குக்கர் கட்சியில் இணைந்தோம். தற்போது அவரோடு மீண்டும் எப்படி பணியாற்ற முடியும்? ஒருவேளை இணைந்தால் தேர்தல் பணிக்கு அழைக்காதீர்கள். அழைத்தால், அவருக்கு எதிராகத்தான் வேலை செய்வோம் என கூறி விட்டனராம்.. இதனால் குக்கர்காரர் மதில் மேல் பூனையாக மண்டை காய்ந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி நிர்வாகிகளின் ஆதரவுடன் இறங்கி அடிக்கும் பெண் அதிகாரியின் தனி டீல் பற்றி தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் முதல்படை வீடு யூனியன் அலுவலகத்தில் ஒரு பெண் அதிகாரி இருக்கிறாராம்.. சமீபத்தில் வேறொரு இடத்திலிருந்து முதல்படை வீட்டிற்கு மாறுதலாகி வந்ததும், அனைத்து ஊராட்சி செயலரையும் அழைத்து யாரிடமும் யாரும் எந்த பணமும் வாங்கக்கூடாதென்று கடும் உத்தரவு போட்டிருக்கிறார்.. இதற்கு சிலர் கலங்கினாலும், பலரும் அதிகாரி பேச்சைக்கேட்டு அசந்து போய், ரொம்பவும் நேர்மைக்கு மாறியிருக்கிறாங்க.. ஆனால், பணம் கொடுத்து பார்க்கும் வேலைகளை இனம் கண்டு இந்த பெண் அதிகாரி தனி டீல் செய்து வருவாய் பார்ப்பது இப்போது தெரிய வந்திருக்கிறதாம்.. பெண் அதிகாரியானவர் தனியாளாக தேவைக்குரிய வேலைக்கு வாங்குவதை வாங்கிக் கொண்டு, தனக்கு கீழிருப்போர் மூலம் எளிதாக வேலைகளை செய்து முடித்து ஒப்படைத்து விடுகிறாராம்.. இவருக்கு பின்னணியில் தூங்கா நகர இலை நிர்வாகிகள் இருப்பதால் தைரியமாக இறங்கி அடிக்கிறாராம்.. இவர் பெறும் தொகையில் எவருக்கும் எந்த பங்கும் போகாததால் இது என்னடா புது ரகமா இருக்கேன்னு ஒப்பந்தகாரர் முதல் அலுவலர்கள் வரை பலரும் இதுக்காகத்தான் இந்த நேர்மையானவர் பில்டப்பா என புலம்பி தவிக்கின்றனராம்.. அத்தோடு நில்லாமல் புகார் மனுக்களை உடன் பணிபுரிவோரே ஊழல் ஒழிப்புத்துறையினருக்கும், உயரதிகாரிகளுக்கும் நிறைத்தும் வருகின்றனராம்.. விரைவில் ஓர் அதிரடி நடவடிக்கை இருக்குமென்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


