தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் குண்டுவெடிப்பு திட்டமிட்ட தீவிரவாத செயல்; பயங்கரவாத நடவடிக்கையை துளியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது

* பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

Advertisement

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத செயல் என்றும், இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா எந்த வகையிலும் தீவிரவாத செயல்களை துளியும் சகித்துக் கொள்ளாது என்று அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10ம் தேதி பரபரப்பான மாலை நேரத்தில் போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்துச் சிதறியது.

இதில், அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து 12 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் முகமது உமர் நபி (28) என சந்தேகிக்கப்படுகிறது. இவருடன் பணியாற்றிய காஷ்மீரைச் சேர்ந்த முசம்மில் அகமது மற்றும் அதீல் அகமது, ஷாஹீன் சயீத் உள்ளிட்ட டாக்டர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

காரில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளுடன் தற்கொலை தாக்குதலை உமர் நபி நடத்தியிருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்புக்கு அடுத்த நாளே 2 நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி நேற்று பிற்பகலில் நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதும் நேராக எல்என்ஜெபி மருத்துவமனைக்கு சென்று குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது குண்டுவெடிப்பின் பயங்கரங்களை சிகிச்சை பெற்று வருவபவர்கள் பிரதமர் மோடியிடம் விளக்கினர். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த சதித்திட்டத்தின் பின்னால் உள்ள அத்தனை பேரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, மாலையில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் டெல்லி கார் குண்டுவெடிப்பு கொடூரமான திட்டமிட்ட தீவிரவாத செயல் என அறிவிக்கப்பட்டது. தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆதரவு தந்தவர்கள் அத்தனை பேரும் நீதியின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என தீர்மானத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

எந்த வடிவிலும் தீவிரவாதத்தை இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது என அமைச்சரவை அறிவித்தது. நெருக்கடியின் போது தைரியத்துடனும் கருணையுடனும் செயல்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள், அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் மற்றும் சரியான நேரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு அமைச்சரவை பாராட்டு தெரிவித்தது. தேசிய பாதுகாப்புக்கான நீடித்த அர்ப்பணிப்புக்கு இணங்க, அனைத்து மக்களின் உயிர்களையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதில் ஒன்றிய அரசு உறுதியாக இருப்பதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கைதான டாக்டர்கள் குழுவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் என்ஐஏ நடத்திய விசாரணையில் டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான பல பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: டெல்லி கார் குண்டுவெடிப்பில் பலியானதாக நம்பப்படும் அல் பலா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் உமர் நபி, தன்னுடன் பணியாற்றும் டாக்டர் முசம்மல் அகமது கனாயியுடன் கடந்த 2021ல் துருக்கிக்கு சென்று வந்த பிறகு மனம் மாறி தீவிரவாத பாதைக்கு சென்றுள்ளார்.

அந்த பயணத்தின் போது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 2 பேரை உமர் நபி சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகே, உமர் நபி தலைமையில் மிகப்பெரிய தாக்குதல் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பழிவாங்க ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உமர் நபி போன்ற டாக்டர்களை வைத்து இந்தியாவில் நாசவேலை செய்ய திட்டமிட்டது. இதற்காக அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட், சல்பர்களை அதிகளவில் சேமிக்க தனது சகாக்களுக்கு உமர் நபி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, முசம்மில் உள்ளிட்டோர் அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் வெடிபொருட்களை சேமிக்கத் தொடங்கினர்.  சமீபத்தில் உமர் தனது கூட்டாளிகளிடம் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார். மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 8 பேர் துப்பாக்கியுடன் பல இடங்களில் புகுந்து நடத்திய தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டனர். அதுபோல தங்களிடம் உள்ள வெடிபொருட்கள் மூலம் 200 ஐஇடி குண்டுகளை தயாரித்து டெல்லியின் முக்கிய இடங்கள் தவிர குருகிராம், பரிதாபாத்திலும் தாக்குதல் நடத்த உமர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக இணையதளங்களில் தேடி வாகனம் மூலம் வெடிக்க வைக்கும் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தவும் தீர்மானித்துள்ளார். இதற்கிடையே, தனது சொந்த ஊருக்கு சென்ற உமர், தனது குடும்பத்தினரிடம் மேற்படிப்புக்கு தேர்வுக்காக படிக்க வேண்டியிருப்பதால் அடுத்த 3 மாதத்திற்கு தன்னால் தொடர்பு கொள்ள முடியாது என கூறியிருக்கிறார். ஆனால், அவரது கூட்டாளிகள் முசம்மில் உள்ளிட்டோர் முன்கூட்டியே போலீசில் சிக்கியதால் உமரின் திட்டம் தவிடுபொடியானது.

இதனால் மாற்று திட்டத்தை யோசித்த உமர் தன்னிடம் இருந்து வெடிபொருட்களை வைத்து காரை வெடிகுண்டாக மாற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறி உள்ளனர். எனவே முன்கூட்டியே உமர் நபியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதால் மிகப்பெரிய தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* 3 மணி நேரம் என்ன செய்தார்?

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காரில் கடந்த 10ம் தேதி காலை பரிதாபாத்தில் இருந்து டெல்லிக்கு வந்த உமர் நபி பிற்பகல் 3.19 மணி அளவில் சுனேஹ்ரி மசூதி வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி உள்ளார். அதற்கு முன்பாக, ராம் லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள ஆசப் அலி சாலையில் உள்ள மசூதிக்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் தொழுகை செய்துள்ளார்.

பிற்பகல் 3.19 மணியிலிருந்து மாலை 6.20 மணி வரையிலும் உமர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. அதன் பிறகு மாலை 6.30 மணி அளவில் புறப்பட்ட உமர் 6.52 மணி அளவில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிக்னலில் காரை நிறுத்திய போது வெடித்து சிதறியிருக்கிறது. பிற்பகல் 3.19 மணி முதல் மாலை 6.20 மணி வரை 3 மணி நேரம் உமர் காரில் இருந்தாரா அல்லது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

* துருக்கிக்கு தொடர்புண்டா?

காரை வெடிக்க வைத்ததாக சந்தேகிக்கப்படும் டாக்டர் முகமது உமர் நபி மற்றும் டாக்டர் முசம்மில் இருவரும் துருக்கிக்கு சென்று வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களின் பாஸ்போர்ட்டில் துருக்கி குடியேற்றத்துறை ஸ்டாம்ப் பதிவாகி உள்ளது. இதனால் டெல்லி குண்டுவெடிப்புக்கும் துருக்கிக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

* இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் துக்கத்திலும், வலிமையிலும் இஸ்ரேல் உங்களுடன் வலுவாக துணை நிற்கிறது. தீவிரவாதம் நம் நகரங்களைத் தாக்கலாம், ஆனால் அது நம் ஆன்மாக்களை ஒருபோதும் அசைக்க முடியாது’’ என கூறி உள்ளார்.

* பரிதாபாத் கார் டீலரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

டெல்லி குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 கார் சுமார் 7 பேரிடம் கைமாறி உமர் நபியிடம் வந்துள்ளது. இந்த காரை விற்பனை செய்த பரிதாபாத் கார் டீலர் அமித் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்து காவல்துறையில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

யாரிடம் இருந்து இந்த காரை அமித் வாங்கினார், யாருக்கு யாருக்கு விற்கப்பட்டது என்ற அனைத்து தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், டெல்லி, உபி, அரியானா மாநிலங்களில் பழைய கார்களை வாங்கி விற்கும் அனைத்து டீலர்களும் ஆவணங்களை முறையாக பராமரிக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான கார் விற்பனைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

* அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.

* காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் திருவனந்தபுரத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் ஆட்சியில், மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த போது, அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகினார். அதே போல டெல்லி குண்டுவெடிப்பில் பாதுகாப்பு தோல்விக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்’’ என்றார்.

* அகமதாபாத்தில் உணவு திருவிழா மற்றும் சர்வதேச புத்தக திருவிழாவை தொடங்கி வைக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குஜராத் செல்ல இருந்த நிலையில், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* ஒன்றிய உள்துறை விவகார நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம் உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாக குற்றம்சாட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி இப்பிரச்னையை எழுப்பினார். ஆனால் குழு தலைவர் ராதா மோகன் தாஸ் அகர்வால் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பான விவாதத்தை நடத்த அனுமதி மறுத்து விட்டார்.

* ‘எங்களுக்கு தொடர்பில்லை’ அல் பலா பல்கலை விளக்கம்

டெல்லி குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் டாக்டர்கள் முகமது உமர் நபி மற்றும் முசம்மில் இருவரும் அல் பலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள். இதனால் அல் பலா பல்கலைக்கழகம் கடுமையான விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளது. பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பூபிந்தர் கவுர் ஆனந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நடந்த துரதிஷ்டவசமான நிகழ்வுகளால் நாங்கள் மிகவும் வருத்தமும் வேதனையும் அடைகிறோம். அதை நாங்கள் கண்டிக்கிறோம். எங்களின் 2 டாக்டர்கள் விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கு பணியாற்றுவதைத் தவிர, அந்த நபர்களுடன் பல்கலைக்கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இது ஒரு பொறுப்பான நிறுவனம். தேசத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது. பல்கலைக்கழகத்தின் நற்பெயரையும், நல்லெண்ணத்தையும் கெடுக்கும் தவறான அவதூறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூத்த டாக்டர் நிசாரம் என்பவர் டெண்லி குண்டுவெடிப்புக்கு பிறகு தலைமறைவாகி உள்ளார். இதனால் அவரது மகளிடம் போலீசார் விசாரிக்கின்றனர். அவர் மீதும் சந்தேகம் வலுத்துள்ளது.

அரியானாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தாவுஜ் கிராமத்தில் அல் பலா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 76 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகம் 1997ல் பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்டது. 2014ல் அரியானா அரசு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தியது. பின்னர் இந்த வளாகத்தில் அல் பலா மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது. டெல்லியின் பிரபலமான ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இருந்து வெறும் 30 கிமீ தொலைவில் அல் பலா அமைந்துள்ளதால் சிறுபான்மையின மாணவர்களுக்கு பயனுள்ள மாற்று கல்வி நிறுவனமாக திகழ்கிறது. அல் பலா அறக்கட்டளை இந்த பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது.

* காஷ்மீர் முதல் டெல்லி வரை நடந்தது என்ன?

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது மற்றும் அன்சார் கஸ்வதுல் ஹிந்த் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டிய 2 பேரை ஸ்ரீநகர் போலீசார் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். இதன் பின்னால் பெரிய நெட்வொர்க் செயல்படுவதையும், அவர்களை மவுல்வி இர்பான் அகமது என்பவர் கையாள்வதையும் நவ்காம் போலீசார் கண்டறிந்தனர். உடனே இர்பான் அகமதுவை கைது செய்த விசாரித்த போதுதான், வெளியூரில் பணியாற்றும் காஷ்மீர் டாக்டர்கள் சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பதாக அவன் தெரிவித்துள்ளான்.

அதன் அடிப்படையில், கடந்த 6ம் தேதி உபியின் சஹரன்பூர் சென்ற நவம்காம் போலீசார் உள்ளூர் போலீசார் துணையுடன் டாக்டர் அதீல் அகமது ராதரை கைது செய்தனர். கடைசியாக அவர் பணியாற்றிய மருத்துவமனையில் அதீலின் லாக்கரில் இருந்த ஏகே47 துப்பாக்கியை போலீசார் மீட்டனர். அதீலை காஷ்மீர் அழைத்து வந்து விசாரித்த போது, அரியானாவின் பரிதாபாத்தில் அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முசம்மில் அகமது கனாயி குறித்து கூறியுள்ளான்.

தனது தங்கையின் திருமணத்திற்காக புல்வாமாவில் உள்ள சொந்த கிராமத்திற்கு வந்திருந்த முசம்மில்லை காஷ்மீர் போலீசார் கைது செய்து, பரிதாபாத்தில் அவர் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டர். அதில் 360 கிலோ வெடிபொருள், ஆயுதங்கள் சிக்கின. முசம்மில் தந்த தகவலின் பேரில் லக்னோ பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த டாக்டர் கும்பலை சேர்ந்த உமர் நபி மட்டும் சிக்காமல் இருந்த நிலையில் டெல்லியில் அவன் குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளான்.

காஷ்மீர் போலீசார் துரிதமாக செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீரில் கண்காணிப்பு மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர்கள் வசிக்கும் 500 இடங்களில் போலீசார் விசாரித்துள்ளனர். பல இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு சந்தேக நபர்கள் நடமாட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

* குண்டுவெடித்த இடத்தில் 40 மாதிரிகள் சேகரிப்பு

குண்டுவெடித்த இடத்தில் இருந்து தடயவியல் குழுவினர் 40 மாதிரிகளை சேகரித்துள்ளனர். அதில், 2 கேட்ரேஜ் தோட்டாக்கள், வெடிக்கக் கூடிய வெடிமருந்துகள், 2 வெவ்வேறு வகையான வெடிபொருட்கள் ஆகியவை அடங்கும். இதில், ஒரு வெடிபொருள் அம்மோனியம் நைட்ரேட்டாக இருக்கலாம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் கைதான டாக்டர் முசம்மில் உள்ளிட்டோரிடம் 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வெடிபொருள் இதை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது. அது குறித்து தடயவியல் பரிசோதனைக்கு பின்னர் தெரிய வரும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். வெடிபொருட்களின் தன்மை, குண்டுவெடிப்பில் அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது.

* ஷாஹீன் மாஜி கணவர் பரபரப்பு வாக்குமூலம்

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக கைதான டாக்டர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள லக்னோ பெண் டாக்டர் ஷாஹீன் சயீத், இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெண்கள் படையை உருவாக்க நியமிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. லக்னோவில் இவரது சகோதரர் முகமது சோயில் கூறுகையில், ‘‘எனது சகோதரி தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இப்போதும் நம்ப முடியவில்லை. அவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை ஏற்க முடியவில்லை’’ என்றார்.

ஷாஹீனின் முன்னாள் கணவர் டாக்டர் ஜாபர் ஹயாத் கான்பூரில் அளித்த பேட்டியில், ‘‘எங்களுக்கு 2003ல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. 2012ல் விவகாரத்து பெற்று விட்டோம். அதன் பின் ஒருமுறை கூட நான் அவரை தொடர்பு கொண்டதில்லை. அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று ஒருபோதும் எந்த அறிகுறியும் இருந்ததில்லை.

தன் குடும்பம், குழந்தைகளுடன் நிறைய பற்று கொண்டிருந்தார். குழந்தைகள் இருவரும் என்னிடம் வளர்ந்தாலும் அவர்களை மிகவும் நேசித்தார். திருமண சடங்குகளின் போது தவிர ஷாஹீன் ஒருபோதும் பர்தா அணியவில்லை. நான் அவளை பர்தாவில் பார்த்ததில்லை. அமைதியான வாழ்க்கைக்காக ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் சென்று செட்டிலாகி விடுவோம் என அடிக்கடி அவர் கூறுவார்’’ என்றார்.

* உமர் நபியின் மற்றொரு சிவப்பு நிற கார் சிக்கியது

டெல்லி குண்டுவெடிப்பில் பயன்படுத்திய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காருடன் உமர் நபி மற்றொரு சிவப்பு நிற போர்டு இகோஸ்போர்ட் காரை (பதிவு எண்: டிஎல்10சிகே0458) வைத்திருந்தாக விசாரணையில் தெரியவந்தது. அந்த காரிலும் வெடி பொருட்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் நேற்று அந்த காரை சல்லடை போட்டு தேடினர். காரை கண்டுபிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

சில மணி நேர தேடுதலில் அந்த கார் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள காந்தவாலி கிராமத்தில் பண்ணை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த காரை உமர் நபி போலி முகவரியில் பதிவு செய்துள்ளது. கார் ஆவணத்தில் உள்ள டெல்லி முகவரியில் ஒரு மதரஸா இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

* குடியரசு தினத்தன்று தாக்குதலுக்கு திட்டம்

டெல்லி குண்டுவெடிப்புடன் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் ஒயிட் காலர் டாக்டர்கள் குழுவில் ஒருவரான காஷ்மீர் டாக்டர் முசம்மில் கனாயியின் மொபைல் போனில் இருந்து பகிரப்பட்ட தரவுகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் அவர், காரை வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் நபியுடன் சேர்ந்த கடந்த ஜனவரியில் செங்கோட்டை பகுதிக்கு பலமுறை வந்து சென்றுள்ளார்.

இதனால் குடியரசு தினத்தன்று இவர்கள் பெரிய தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அத்திட்டத்தை அவர்கள் கைவிட்டிருக்கக் கூடும் என போலீஸ் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* 2,500 கிலோ வெடிபொருள் பதுக்கிய மதகுரு கைது

வெடிபொருள் பதுக்கி கைதான டாக்டர்கள் குழுவுடன் தொடர்புடைய, அரியானா மாநிலம் மேவத்தை சேர்ந்த மதகுரு மவுல்வி இஷ்தியாக் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் அல் பலா பல்கலைக்கழகத்தில் மத சொற்பொழிவுகளை நடத்தி வந்தார். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் இஷ்தியாக் வாடகை வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டிலிருந்து 2,500 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைதாகி இருப்பதாக போலீசார் கூறி உள்ளனர். இவர் ஸ்ரீநருக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுகிறார். இந்த வழக்கில் 9வது கைது இது.

* டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு

குண்டுவெடிப்பை தொடர்ந்து டெல்லி முழுவதும் போலீசார் விரிவான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். நகரில் நுழையும் வெளியேறும் அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்படுகின்றன.

காஜிபூர், சிங்கு, திக்ரி மற்றும் பதர்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும் பாதுகாப்பு சோதனைகளை மூத்த காவல்துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருகின்றனர். சந்தைகள், மெட்ரோ நிலையங்கள், ரயில் முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாவட்ட காவல் துறைகளும், சிறப்புப் பிரிவுகளும் விழிப்புடன் இருக்கவும், நெரிசலான பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஒரு மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.

Advertisement