Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் பூதாகரமாகும் புதிய சிக்கல்; ‘அல் பலா’ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகுமா?: ‘நாக்’, ‘யுஜிசி’, ‘ஏஐயு’ நோட்டீசால் நெருக்கடி

பரிதாபாத்: டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ‘அல் பலா’ பல்கலைக்கழகம் சிக்கியுள்ளதால், அந்த பல்கலைகழகத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், ‘நாக்’, ‘யுஜிசி’, ‘ஏஐயு’ போன்ற அமைப்புகள் அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருவதால், அந்த பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட டாக்டர் உமர் நபி மற்றும் அவருடன் தொடர்புடைய டாக்டர்கள் முஜாமில், ஷாஹீன் ஆகிய இருவரும், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த பயங்கரவாத தொடர்பு வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை அமைப்புகள் முகாமிட்டுள்ளன. இதனால் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சமும், சந்தேகமும் நிலவி வருகிறது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த டாக்டர் உமர் நபி, வகுப்பறைகளில் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டதாகவும், தலிபான் பாணியிலான கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் மாணவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், ‘ஆண், பெண் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து படிப்பது எங்களுக்கு பிடித்திருந்தது. ஆனால், அவர் வகுப்புக்கு வந்தால் எங்களை தனித்தனியாக அமர வைப்பார்’ என்று குறிப்பிட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாகவும், வளாகத்தில் ஒருவிதமான அச்ச சூழல் நிலவுவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான டாக்டர் முஜாமில் சயீத், பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிபொருட்களை சேமித்து வைப்பதற்காக இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார். முஜாமில் வாடகைக்கு எடுத்திருந்த இரண்டு வீடுகளில் இருந்து சுமார் 3,000 கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதும், ஷாஹீனின் காரில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கூறுகையில், ‘முஜாமில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி அறை கேட்டு வந்தார். இரண்டு மாத வாடகையை முன்பணமாக கொடுத்து சாவியை வாங்கிக்கொண்டு சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவே இல்லை. கடந்த வாரம் காவல்துறையினர் வந்து விசாரணை நடத்திய பிறகே, அவர் வெடிபொருட்களை பதுக்கி வைக்க அறையை பயன்படுத்தியது தெரியவந்தது’ என்றார்.

இந்நிலையில், இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம் (ஏஐயு), அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் உறுப்புரிமையை உடனடியாக இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் பங்கஜ் மிட்டல், பல்கலைக்கழக துணைவேந்தர் பூபேந்தர் கவுர் ஆனந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சங்கத்தின் துணை விதிகளின்படி, அனைத்து பல்கலைக்கழகங்களும் நன்னடத்தையுடன் இருக்கும் வரை மட்டுமே உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள். ஆனால், ஊடக தகவல்களின்படி, அல் ஃபலா பல்கலைக்கழகம் நன்னடத்தையுடன் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சங்கத்தின் பெயரையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்த பல்கலைக்கழகத்திற்கு இனிமேல் அதிகாரம் இல்லை என்றும், உடனடியாக இணையதளத்திலிருந்து சங்கத்தின் சின்னத்தை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஆதாரமற்ற மற்றும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக துணைவேந்தர் பூபேந்தர் கவுர் ஆனந்த் தெரிவித்திருந்தார். ‘சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே தொழில்முறை உறவைத் தவிர வேறு எதுவும் இல்லை’ என்று அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், பல்கலைக்கழகத்தின் மீதான சிக்கல்கள் இதோடு நிற்கவில்லை. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலான ‘நாக்’ அமைப்பும் பல்கலைக்கழகத்திற்கு எதிராகக் கடுமையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த ‘ஏ’ தர மதிப்பீடு, முறையே 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் காலாவதியாகிவிட்டதாக ‘நாக்’ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக ‘நாக்’ அமைப்பின் இயக்குநர் கணேசன் கண்ணபிரான் அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘எதிர்காலத்தில் உங்களை ஏன் மதிப்பீட்டிற்கு தகுதியற்றதாக அறிவிக்கக் கூடாது? உங்கள் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி யுஜிசி மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஏன் பரிந்துரைக்கக் கூடாது?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், காலாவதியான அங்கீகார விவரங்களை இணையதளம் உட்பட அனைத்து பொது ஆவணங்களிலிருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் இணையதளம் முடக்கப்பட்டது. பயங்கரவாத தொடர்பு மற்றும் அங்கீகார முறைகேடு என அடுத்தடுத்த நெருக்கடிகளால் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையே, பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரங்கள் மற்றும் பயங்கரவாத தொடர்புடைய மூன்று மருத்துவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் ஏற்கெனவே பல்கலைக்கழகத்தின் கணக்கு தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்து வருகிறோம்’ என்றார். இந்த விரிவான விசாரணை மூலம், பல்கலைக்கழகத்தின் நிதிப் பரிமாற்றங்களில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளதா என்பது கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நெருக்கடிகளில் பல்கலைக்கழகம் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கொலைப்படை தீவிரவாத பயிற்சி;

டெல்லி கார் குண்டுவெடிப்பின் தீவிரவாதி உமர் நபியின் பின்னணி மற்றும் அவன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு, கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பே உமர் நபியைத் தங்களது அமைப்பில் சேர்த்து, தற்கொலைப்படை தீவிரவாதியாகப் பயிற்சி அளித்துள்ளது. 1989ல் பிறந்த உமர், நகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பட்டம் பெற்றவர். டெல்லிக்கு வருவதற்கு முன்பு, அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியபோது, அவரிடம் உளவியல் மதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது, அவரிடம் மிகவும் வலுவான மற்றும் மாற்றிக்கொள்ள முடியாத சித்தாந்த நம்பிக்கைகள் இருப்பதும், தனது தீவிரவாத நோக்கங்களை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும் திறன் கொண்டவர் என்பதும் கண்டறியப்பட்டது. பொதுவாக ஜெய்ஷ் அமைப்பில் சேருவது எளிதல்ல; இந்தியா மீது தணியாத வெறுப்பு கொண்டவர்கள் மட்டுமே, கடுமையான சோதனைகளுக்குப் பிறகு அமைப்பின் முக்கியப் பொறுப்புகளுக்கு உயர்த்தப்படுகிறார்கள் என்று புலனாய்வு வட்டாரங்கள் கூறின. இதற்கிடையே, இந்த வழக்கில் லக்னோவில் கைது செய்யப்பட்ட டாக்டர் ஷாஹீன் ஷாஹித் குறித்து விசாரணை வட்டாரங்கள் கூறுகையில், ‘எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல்கள் குறித்த விவரங்களை, பெண் அதிகாரிகளை வைத்து விவரித்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஜெய்ஷ் அமைப்பு பெண்களைத் இந்த அமைப்பில் சேர்க்கத் தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்தன.

உமர் நபியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு;

டெல்லி கார் குண்டு வெடிப்பு கோர சம்பவத்தில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்டது டாக்டர் உமர் நபி பட் என்பது, அவரது குடும்பத்தினரின் டி.என்.ஏ. மாதிரிகளுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டது. இவர், காஷ்மீர், அரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ‘படித்தவர்கள் அடங்கிய பயங்கரவாதக் குழுவில்’ முக்கிய நபராக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், கோயில் கிராமத்தில் உள்ள டாக்டர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடியாக வெடிவைத்துத் தகர்த்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இந்த வீடு சக்திவாய்ந்த வெடிகுண்டு (ஐ.இ.டி.) மூலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தகர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.