டெல்லி கார் குண்டு வெடிப்பில் சுவிஸ் செயலி பயன்படுத்திய தீவிரவாதிகள்: விசாரணையில் தகவல்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் த்ரீமா செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் குழுவினர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து நாட்டு தயாரிப்பான த்ரீமா என்ற செயலியை பயன்படுத்தி உள்ளனர்.
த்ரீமா செயலி மூலம் உரையாடுவதற்கு மொபைல் எண்களோ மின்னஞ்சல் முகவரிகளோ தேவையில்லை. உரையாடுபவர்கள் நேரில் சந்திக்கும் போது செயலியில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து விட்டு, கட்டணத்தை பிட்காயின் மூலம் செலுத்தி கொள்ளலாம். இதனால் செயலியை பயன்படுத்துபவர்களை கண்டுபிடிப்பது கடினம்.
இந்த செயலியில் உரையாடல்கள், புகைப்படம், வீடியோ, இருப்பிடம், வீடியோ கால், குழு உரையாடல் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது. இதை பயன்படுத்திய பிறகு இருமுனைகளிலும் செய்திகளை அழித்து விட முடியும். மேலும் தனிப்பட்ட சர்வர் மூலம் உரையாடல்களை பிறர் அணுக முடியாத வகையில் செயலி அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.