டெல்லி கார் குண்டுவெடிப்பு விவகாரம்: தலிபான் அரசு கண்டனம்
ஆப்கானிஸ்தான்: டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு வெள்ள நிற ஹுண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் 3 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்தகைய குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 12 பேரின் உறவினர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தனது ஆறுதலை பதிவு செய்துள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தலிபான் அரசு கூறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, வங்கதேசம், உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் டெல்லி குண்டுவெடிப்பிற்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.