Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி கார் வெடிப்பு.. காயமடைந்தவர்களை பிரதமர் மோடி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல்!!

டெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்து லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் திங்கள் கிழமை மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூட்டானில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திப்பதற்காக, லோக் நாயக் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்றார். அவர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனை அவருடைய எக்ஸ் வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். சதி திட்டத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் நேராக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து உள்ளார். அதன் பின்னர், அவர்களுடன் உரையாடியதுடன், விரைவில் குணமடைந்து வரும்படி வாழ்த்தினார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர், மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விரிவான விவரங்களையும் கேட்டறிந்தார்.