Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் ஆண்டு முழுவதும் விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன்படி, நவம்பர் 7ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், நவம்பர் 8ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என உத்தரவிட்டனர். மேலும், நவம்பர் 4 முதல் 6ம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யவும் அனுமதி அளித்தது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட அமைதிப் பகுதிகளில் இருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்த நீதிபதிகள், ஆன்லைன் விற்பனைக்கும் அனுமதி மறுத்தனர்.

அங்கீகரிக்கப்படாத பட்டாசுகள், பேரியம் கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை விற்பனை செய்யவும் தடை விதித்தனர். இந்தத் தற்காலிகத் தளர்வு நவம்பர் 8ம் தேதியுடன் முடிவடைவதுடன், நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பட்டாசுகளுக்கான முழுமையான தடை மீண்டும் அமலுக்கு வரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.