டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை விசாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய புலனாய்வு முகமை
டெல்லி : டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை விசாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய புலனாய்வு முகமை. டெல்லி செங்கோட்டை அருகே நவ. 10(திங்கள்கிழமை) மாலை கார் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கலாம் என்றும் பயங்கரவாத சதிக்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 3 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த வழக்கை டெல்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமை(என்ஐஏ)யிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் கார் வெடிவிபத்து குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
ஒரு ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி.க்கள், மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி. அளவிலான அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, என்ஐஏ ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் செயல்படும். இன்று, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, டெல்லி காவல்துறை மற்றும் அரியானா காவல்துறையினரிடமிருந்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தொடர்பான அனைத்து வழக்கு ஆவணங்களையும் என்.ஐ.ஏ. கைப்பற்றும். கூடுதலாக, இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த என்.ஐ.ஏ. DG மற்றும் IB தலைவர் இன்று கூடுகின்றனர்.