*கடற்பகுதியில் கண்காணிப்பு தீவிரம்
கடலூர் : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 2வது நாளாக தீவிர சோதனை நடந்தது. மேலும், கடற்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லி வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியுள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய நெடுஞ்சாலைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூரில் ஆல்பேட்டை, சாவடி சோதனை சாவடிகள் மற்றும் உழவர் சந்தை, கடலூர் முதுநகர், பச்சையாங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், பாரதி சாலையில் நள்ளிரவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிவிரைவு படை வீரர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அந்த வழியாக வந்த கார்கள், வேன்கள், சரக்கு வாகனங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி சந்தேக நபர்கள் யாரேனும் உள்ளார்களா, ஆட்சேபகரமான பொருட்களை கொண்டு செல்கிறார்களா என சோதனை செய்தனர்.
இந்நிலையில் நேற்று 2வது நாளாக மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் சோானையில் ஈடுபட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி நடந்தது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் படகுகள் மற்றும் மீன்பிடித்து கரை திரும்பிய படகுகளை சோதனையிட்டனர். மேலும், கடல் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என விசாரணை
மேற்கொண்டனர்.
* ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியுள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
* வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
* சந்தேக நபர்கள் யாரேனும் உள்ளார்களா, ஆட்சேபகரமான பொருட்களை கொண்டு செல்கிறார்களா என சோதனை செய்தனர்.
