டெல்லி: டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 300ஐ கடந்து மோசமான நிலையில் உள்ளதால் கிராப் 2 (GRAP - Graded Response Action Plan Stage II) கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, மின்சாரம், சிஎன்ஜி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி; காற்று மாசால் பார்க்கிங் கட்டணமும் உயர்த்தப்பட்டு, பொதுப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது
டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்டு, பிஎஸ்-6 (BS-VI) தரநிலையைப் பூர்த்தி செய்யாத பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசரக்கால சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. சொந்த வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க பார்க்கிங் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன
இயந்திரங்கள் மூலம் சாலைகளைப் பெருக்குதல் மற்றும் தூசைக் கட்டுப்படுத்த தண்ணீருடன் ரசாயனக் கலவை தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நவீன மாசுத்தடுப்புக் கருவிகள் பொருத்தப்படாத டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் நிலக்கரி மற்றும் விறகு பயன்படுத்துவதற்கும் குறிப்பாக தந்தூரி அடுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மாசைக் கட்டுப்படுத்தவும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களின் வேலை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன


