தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலையில் மகா ரதம் வெள்ளோட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் வெள்ளோட்டம் மாட வீதியில் கோலாகலமாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின், 7ம் நாளன்று மாட வீதியில் தேரோட்டம் மிகவும் சிறப்புக்குரியது. ஒரே நாளில், அடுத்தடுத்து 5 தேர்களும் மக்கள் வெள்ளத்தில் பவனி வருவது வழக்கம்.
இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு, பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி கோயில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. பஞ்ச ரதங்களில் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது மகாரதம். அதன் உயரம் சுமார் 59 அடி. சுமார் 200 டன் எடை கொண்டது. தேர் சக்கரத்தின் விட்டம் 9 அடியாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ரூ.70 லட்சம் மதிப்பில் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்ட மகாரதம் வெள்ளோட்டம் நேற்று மாடவீதியில் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக மகா ரதத்துக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது. தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசம், மகா ரதத்தின் இறையாசனத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, தேர் சக்கரங்களுக்கு புனித நீர் தௌிக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா எனும் பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் வெள்ளோட்டம் நடந்தது.
தேரடி வீதியில் ராஜகோபுரம் எதிரில் இருந்து காலை 8.15 மணிக்கு தொடங்கிய மகாரதம் வெள்ளோட்டம், திருவூடல் தெரு, பே கோபுர வீதி, பெரிய தெரு வழியாக வலம் வந்து பகல் 12.15 மணிக்கு 4 மணிநேரத்தில் நிலையை அடைந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். தேரோட்டத்தின் முன்பாக, பரத நாட்டிய குழுவினர் பக்திப் பாடல்களுக்கு நடனமாடியபடி சென்றனர். தேர் வெள்ளோட்டத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பி.சி.என்.அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.