Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஓய்வு முடிவு வலியையும், வேதனையையும் தருகிறது: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உருக்கம்

புவெனஸ் அயர்ஸ்: கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகான இக்காலகட்டத்தில் நீண்ட ஆலோசனைக்கு பிறகே, இதை அறிவிக்கிறேன். நான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கிறேன். நிச்சயம் இந்த முடிவு எனக்கு இன்னும் வலியையும், வேதனையையும் தருகிறது. ஆனால், இதுதான் அதற்கான சரியான நேரமென நான் கருதுகிறேன். என்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் கொடுத்தேன். அதை உறுதியாக சொல்வேன்.

தேசிய அணியின் ஜெர்ஸிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, கடுமையாக போராடினேன். கால்பந்து மூலம் உங்களை (அர்ஜென்டினா மக்கள்) பெருமிதம் கொள்ளச் செய்தேன். எனது ஓய்வை தொடர்ந்து தகுதி வாய்ந்த இளம்வீரர்கள் நம் அணிக்காக விளையாடவுள்ளனர். தேசிய அணியில் விளையாடுவதை நான் நேசித்தேன். ஆனால், இந்த அத்தியாயம் இங்கு முடிகிறது. 20 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி. இனி அணிக்கு வெளியில் இருந்து எனது ஆதரவு தொடரும். என்னை அர்ஜென்டினாவை சேர்ந்தவராக படைத்த இறைவனுக்கு நன்றி,” என்று உருக்கமாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் ஓய்வு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லியோனல் மெஸ்ஸி, 2006 முதல் 2026ம் ஆண்டு வரை 6 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார். அவர் ஆடிய 34 போட்டிகளில் 21 கோல்களை அடித்துள்ளார். அவரது சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், மெஸ்ஸி தனது கிளப் அளவிலான ஆட்டத்தை ‘‘இன்டர் மியாமி’’ அணிக்காக தொடர்கிறார். அந்த அணியுடன் அவருக்கு 2028ம் ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது.

வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்

மெஸ்ஸியின் ஓய்வை தொடர்ந்து சக வீரர்கள், தங்களது உணர்வுபூர்வ பதிவுகளை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளனர். அதில், மெஸ்ஸியின் மிக நெருங்கிய நண்பரான சக வீரர் ரோட்ரிகோ டி பால்: ‘‘நம் நாட்டின் மீது நீங்கள் கொண்ட அன்பு, ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்பதற்காக உங்களுக்குள்ளேயே நீங்கள் நடத்திய உள்மனப்போராட்டங்கள், உங்களது தலைமை பண்பு, எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய அணிக்குள் நுழைந்த ஒவ்வொரு வீரரையும் உடனடியாக தங்களது சொந்த வீட்டில் இருப்பது போல் உணர வைத்த மனிதாபிமானம், அணியில் ஒவ்வொரு வீரரிடமும் நீங்கள் காட்டிய அக்கறை என எதற்கும் வார்த்தைகளே இல்லை. நன்றி லியோ.

வரலாற்றின் மிகச்சிறந்த வீரரான நீங்கள், என்றும் அழியாதவர்,’’ எனக்கூறியுள்ளார். ஏஞ்சல் டி மரியா: “உன்னை பார்க்கவும், உன்னைக் கொண்டாடவும், எல்லாவற்றிற்கும் மேலாக உன்னோடு தேசிய அணியில் இத்தனை ஆண்டுகள் களம் பகிரவும் சரியான நூற்றாண்டில் நான் பிறந்திருக்கிறேன் என்பது மட்டுமே எனக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். லூட்டாரோ மார்டினெஸ் & என்ஸோ பெர்னாண்டஸ்: ‘‘உங்களை மிகவும் மிஸ் செய்வோம் கேப்டன்’’ என்று தங்களது பிரியாவிடையைப் பகிர்ந்துள்ளனர்.