சென்னையின் குடிநீர் தேவைக்கு சிக்கராயபுரம் கல்குவாரி நீரை பயன்படுத்த முடிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
குன்றத்தூர்: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை பயன்படுத்த முடிவு செய்து, அதற்கான ஆய்வு பணிகளில் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் 23 கல்குவாரிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 300 முதல் 400 அடி ஆழம் கொண்டவை. இந்த குவாரிகள் முழுவதும் தற்போது மழைநீரால் நிரம்பி காணப்படுகிறது.கடந்த 2017ம் ஆண்டு கோடை காலத்தில் வறட்சி காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரின்றி வற்றியது. இதையடுத்து அப்போதையடுத்து சிக்கராயபுரம் கல்குவாரிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி, குழாய்கள் வழியாக செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது.
தொடர்ந்து, 2019ம் ஆண்டு வரை இந்த கல்குவாரி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீரானது. இதையடுத்து செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் போதிய நீர்வரத்து இருந்ததால் கல்குவாரி நீரை எடுப்பது படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் தற்போது சிக்கராயபுரம் கல்குவாரி நீரை மீண்டும் பயன்படுத்த பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. அதாவது செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு 16 கன அடியாக உள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் தமிழகத்திற்கும், தெற்கு ஆந்திராவுக்கும் பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை குறைந்தால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கல்குவாரி நீரை மீண்டும் சுத்திகரித்து பயன்படுத்த பொதுப்பணி துறை முடிவு செய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை பொழிவு 50 சதவீதத்திற்கு மேல் குறைந்ததால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக கடந்த 2016ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் மிக குறைந்த அளவு மழை பெய்ததால் கடந்த 2017ம் ஆண்டு தொடக்கத்திலேயே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டன. இதனால் சிக்கராயபுரம் கல்குவாரி நீர் சுத்திகரித்து பயன்படுத்தப்பட்டது. இதேபோல் 2018ம் ஆண்டும் வடகிழக்கு பருவமழை 55 சதவீதம் குறைவாக பெய்தது. இதனால் 2019ம் ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2003ம் ஆண்டு மழை குறைந்ததால், 2004ம் ஆண்டு சென்னையின் முக்கிய ஏரிகள் வறண்டு சென்னைக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கல்குவாரி நீரை பயன்படுத்துவதற்கான தயார் நிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பல ஆண்டுகளுக்கு பிறகு கல்குவாரிகளில் இருந்து நீர் எடுக்கும் நிலை ஏற்பட்டால், பழைய குழாய் பாதைகளில் ஏதேனும் அடைப்பு அல்லது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர். குவாரியில் நீரில் மிதக்கும் ராட்சத மின்சார மோட்டார்களை பொருத்தி தண்ணீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் கல்குவாரி நீரானது சென்னைக்கு குடிநீராக கொண்டு வரப்படும் என தெரிகிறது.