பள்ளிபாளையம்: வாங்கிய கடனை திருப்பி கொடுக்காவிட்டால், கிட்னியை கொடு என மிரட்டுவதாக வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு, தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஐந்துபனை புதுதெருவைச் சேர்ந்தவர் நந்தகோபாலன்(42). திருமணமாகாத இவர், சேலத்தில் உள்ள ஸ்டூடியோவில் வீடியோ எடிட்டிங் வேலை செய்து வந்தார். இந்த ஸ்டூடியோ உரிமையாளர்கள் தினேஷ், ஹரி ஆகியோரிடம் நன்கு பழகி வந்துள்ளார். அப்போது, சொந்த தேவைக்காக வேலை செய்த இடத்தில் பணம் கேட்டுள்ளார்.
உரிமையாளர்கள் இருவரும் தெரிந்தவர்களிடம் சிபாரிசு செய்து, ரூ.7 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளனர். இந்த கடனுக்கான வட்டியை, நந்தகோபாலன் சரியாக செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் ஸ்டூடியோ உரிமையாளருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால், அவர்கள் நந்தகோபாலனின் சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 10 மாதங்களாக, நந்தகோபாலன் ஸ்டூடியோவுக்கு வேலைக்கு செல்லவில்லை.
அவரிடம் பணம் கேட்டு பலமுறை போனில் தொடர்பு கொண்ட ஸ்டூடியோ உரிமையாளர்கள், நேற்று முன்தினம் நந்தகோபாலனின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த நந்தகோபாலன், தற்கொலை செய்ய முடிவெடுத்தார். பின்னர், தனது செல்போனில், வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அதில் தினேஷ், ஹரி ஆகியோர் பணத்தை கேட்டு தொல்லை கொடுப்பதாகவும், கிட்னியை விற்று பணத்தை கொடு என மிரட்டுவதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதாகவும் பதிவிட்டுள்ளார். பின்னர், நேற்று காலை வீட்டில்,சேலையில் தூக்கு போட்டு நந்தகோபாலன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குபதிந்து, அவரது செல்போனில் இருந்த வீடியோ பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
