Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாள வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு: சுமார் 4,000 பேரை காணவில்லை; 6வது நாளாக தேடுதல் பணி நீடிப்பு

காத்மாண்டு: நேபாள-திபெத் எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நகரங்கள், கிராமங்கள் உருக்குலைந்துள்ளன. 6ம் நாளாக நேற்றும் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்த நிலையில், பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய மாலை நிலவரப்படி பலி 939 ஆக அதிகரித்ததாக நேபாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சித்வான் மாவட்டத்தில் 272 உடல்களும், நவல்ப்பராசி கிழக்கில் 207, நவல்ப்பராசி மேற்கில் 151, கோர்கா மாவட்டத்தில் 62, நுவாகோட்டில் 95, தடிங்கில் 55, தனஹுவில் 37, ரசுவாவில் 24 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

99 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 591 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 10,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் உள்ளூர் மக்களும், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, மால்டா, துருக்கி, சுவிட்சர்லாந்து மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். நீர்மின் நிலையங்களில் 933 பேர் மாயம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு நீர்மின் நிலையங்களில் 933 தொழிலாளர்கள், ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சுரங்கங்களில் சிக்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் இந்திய, சீனா நிபுணர் குழுவுடன் தேடுதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரை பல்வேறு நீர்மின் நிலைய சுரங்கப்பாதைகளிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கட்டுமானத்தில் உள்ள அப்பர் திரிசூலி-1 நீர்மின் நிலையத்தில் மட்டும் சுமார் 400 பேர் சுரங்கப்பாதைகளுக்குள் இருக்கலாம் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரங்கப்பாதை நுழைவாயில்கள் சேறு, மண் குவிந்து மூடப்பட்டுள்ளன. அவற்றை கனரக இயந்திரங்கள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி அகற்றி உள்ளே செல்வதற்கான வழித்தடம் விரிவுபடுத்தப்படுகிறது.

3 இந்தியர்களை மீட்டது நேபாள ராணுவம்

ரசுவா மாவட்டத்தில் உள்ள சிலிம் கிராமத்தில் இருந்து நேபாள ராணுவம் நேற்று 4 பேரை மீட்டது. இதில் 3 பேர் இந்தியர்கள். இது குறித்து நேபாளத்திற்கான இந்தியதூதர் நவீன் வஸ்தவா நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ரசுவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலிம் கிராமத்திலிருந்து 5 நாட்களுக்குப் பிறகு 3 இந்தியர்களும் அவர்களது சக நேபாள ஊழியரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்தேன். அவர்களை மீட்ட நேபாள ராணுவத்திற்கு நன்றி. 3 பேரும் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் செய்து வருகிறது’’ என தெரிவித்துள்ளார்.

உபியில் மீட்கப்பட்ட 4 சடலங்கள் நேபாளத்திடம் ஒப்படைப்பு

நேபாள வெள்ளத்தை தொடர்ந்து, ஆற்று வெள்ளத்தில் சில உடல்கள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அடித்து வரப்பட்டுள்ளன. மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நாராயணி-கண்டகி ஆற்றில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத 4 உடல்கள், பிரேத பரிசோதனைக்குப் பிறகு நேபாள நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். மீட்கப்பட்ட உடல்களில் 3 பேர் பெண்கள், ஒருவர் ஆண்.