பலி எண்ணிக்கை 1,127 ஆக உயர்வு; நேபாளத்தில் இன்னும் 5,000 பேரை காணவில்லை: 3 ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது
காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ள நிலையில் இன்னும் சுமார் 5,000 பேரை காணவில்லை. இதற்கிடையே, தொடர் மழை காரணமாக 3 முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். 8வது நாளாக நேற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. இதில் பலி எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 1,113 உடல்களுக்கான பிரேதப் பரிசோதனை மற்றும் சட்டப்பூர்வ அடையாள நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றில் 95 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 6,541 பேர் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 4,858 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. இதற்கிடையே, நேபாளத்தில் பெய்து வரும் தொடர் மழை, ரசுவா மற்றும் நுவாகோட் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. நீர்மின் நிலைய சுரங்கப்பாதையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சகதி குவிந்துள்ளதால் உள்ளே செல்வதில் சிரமம் நீடிக்கும் நிலையில், தற்போது இரவு முழுவதும் பெய்த மழையால் சுரங்கப்பாதைகள் தண்ணீரால் நிரம்பியிருப்பதாக தேசிய பேரிடர் ஆணையத்தின் நிர்வாக தலைவர் தர்மராஜ் உப்ரெட்டி கூறி உள்ளார். இந்த சுரங்கங்களில் சுமார் 900 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சுரங்கப்பாதைகளுக்கு உபகரணங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியாததால் மீட்புப் பணிகள் மந்தமடைந்துள்ளதாக, நேபாளத்தின் சுயாதீன மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கணேஷ் கார்க்கி தெரிவித்துள்ளார். ஆற்றால் அடித்து வரப்பட்ட பொருட்கள் சுரங்கப்பாதைகளுக்கு மேல் குவிந்துள்ளதால், சுரங்கப்பாதை நுழைவாயில்களை கண்டறிவது கூட கடினமாகிவிட்டதாக அவர் கூறி உள்ளார். தொடர் மழை காரணமாக சிந்துலி மாவட்டத்தில் உள்ள சுன் கோஷி ஆறு, கூர்கா மாவட்டத்தில் உள்ள புதி கண்டகி ஆறு, தாதெல்துராவில் உள்ள மகாகாளி ஆறு ஆகியவற்றில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி விட்டதால், ஆற்றின் கீழ்மட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கும் பொறுப்பு உள்ளது
வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் தொடர்பாக நேபாள பிரதமர் பலேந்திர ஷா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று அளித்த விளக்கத்தில், ‘‘பருவநிலை மாற்றத்தால் மலைப்பகுதி மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அபாயங்கள் அதிகரித்து வருவதை இந்த சம்பவம் காட்டுகிறது. பருவநிலை மாற்றத்திற்கு பின்னால் உலகளாவிய பங்களிப்பு உள்ளது. எனவே, அதன் விளைவுகளை கையாள்வதிலும் குறைப்பதிலும் உலகளாவிய சமூகத்திற்கு பொறுப்பு உள்ளது. உறுதியுடனும் தைரியத்துடனும் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு பெரிய நெருக்கடி நிலையில் சர்வதேச உதவியை ஏற்க மறுப்பதற்கே இடமில்லை. ஆரம்பத்திலிருந்தே ஆதரவையும் உதவியையும் பெற நாங்கள் சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்’‘ என்றார்.
கூடுதல் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்திற்கு 11 பேர் கொண்ட மீட்புக் குழுவுடன் 5 டன்னுக்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளைக் கொண்ட கூடுதல் நிவாரணப் பொருட்களை இந்தியா நேற்று அனுப்பியது. இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘இந்தியாவின் 5வது விமானம் நேபாளத்திற்கு புறப்பட்டுள்ளது. அதில் சிறப்பு உபகரணங்களுடன் கூடிய 11 பேர் கொண்ட மீட்புக் குழுவும், 5.5 டன் அத்தியாவசிய மருந்துகளும் கொண்டு செல்லப்படுகின்றன’’ என்றார். இந்தியா ஏற்கனவே நேபாளத்திற்கு மொத்தம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
டிரோன் மூலம் கொண்டு செல்லப்படும் சடலங்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் சாலைகள் சீர்குலைந்து, போக்குவரத்திற்கு சாத்தியமில்லாத நிலையில் அங்கு சிக்கியிருப்பவர்களை கண்டறிய டிரோன்கள் வான்வழிப் புகைப்படங்கள் எடுத்தல், நிலப்பரப்பை வரைபடமாக்குதல் போன்ற வழக்கமான பணிகளைத் தாண்டி, உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கும் உதவுகின்றன. நுவாகோட் பகுதியின் தேவிகாட்-3 பகுதியிலிருந்து தேவிகாட்-5 பகுதிக்கு இந்த வாரம் டிரோன்கள் மூலம் 7 சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன. மீட்புக் குழுவினர் பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான நிலப்பரப்பு கொண்ட பகுதியிலிருந்து சடலங்களை டிரோன்கள் கொண்டு வருகின்றன.



