Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பலியானவர்கள் 27 ஆக உயர்வு; கேரளத்தில் இன்றும் கனமழை: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்றும் கனமழை தொடர்கிறது. இன்று 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கேரளத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை இன்றும் தொடர்கிறது. இன்று ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஏனைய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று திருச்சூர், இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 4 பேரை காணவில்லை. 418 முகாம்களில் 18,434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு அபாயம் உள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இங்கு உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மலையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீதெரிவித்துள்ளார். கோழிக்கோடு-வயநாடு, கண்ணூர்-வயநாடு இடையே உள்ள மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கார் மோதி காங். எம்எல்ஏ காயம்

பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான அபின் வர்க்கி கடந்த சில நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் மீட்பு பணிகளை முடித்துவிட்டு காரில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஓமல்லூர் அருகே எதிரே வந்த கார் மீது எம்எல்ஏ சென்ற கார் மோதியது. இதில் அபின்வர்க்கி உள்பட 4 பேர் காயமடைந்தனர். அனைவரும் அருகில் கல்லிசேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.