Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்திய அரசு வழங்கியது போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உடனே உயர்த்தி வழங்க வேண்டும்: அலுவலக உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு வழங்கியது போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியினை உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று அரசு அலுவலக உதவியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமையில், அகில இந்திய தலைவர் கே.கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முனியப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எஸ்.மதுரம், கே.கணேசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்றவாறு உடனடியாக பூர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அனைவருக்கும் அமுல்படுத்திட வேண்டும். மத்திய அரசு வழங்கியது போல தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிட வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், பண்ணை பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், தினக்கூலி, தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, காவல்துறை, கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற அனைத்து துறைகளிலும் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 12,527 ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும்.

தமிழக பதிவுத்துறையில் காலியாக உள்ள இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பகல் பணியில் நியமிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்களை இரவு காவலர் பணி பார்க்க நிர்ப்பந்திக்க கூடாது. எங்கள் கோரிக்கைகளை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்ட முடிவில் மாநில பொருளாளர் எம்.சண்முகம் நன்றி கூறினார்.