‘‘பனியன் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை குழு துணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி இருக்காங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ நாம் திட்டம் மூலம் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளை பொருளுக்கான தொகை வியாபாரிகளால் 24 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், பனியன் மாவட்டத்தில் துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் செயல்படும் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இருந்து வந்திருக்கு.. இதனால் 658 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருளுக்கான தொகை ரூ.2 கோடி பட்டுவாடா செய்யாம நிலுவையில் இருக்கிறதாம்.. இதை முறையாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விற்பனைக் குழு துணை இயக்குநர் கண்டுகொள்ளவில்லையாம்..
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு புகார் மனு அனுப்பி இருக்காங்க.. இந்த புகார் தொடர்பாக உயர்அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியதில் புகார் உண்மை என்பது உறுதியாகி இருக்காம்.. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்களாம்.. விரைவில் நன்னடத்தை விதி மீறலின் கீழ் நடவடிக்கை இருக்கும்னு சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ம.உ. மாநாட்டில் முரசு கட்சி கூட்டணி பற்றி அறிவிக்காத சஸ்பென்ஸ்சுக்கு எண்ணிக்கை குழப்பம் தான் காரணமாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடல் ஊர் மாவட்டத்தில் மக்கள் உரிமை மாநாட்டை நடத்தியது முரசு கட்சி.. கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பில் வந்த தொண்டர்களுக்கு அண்ணியாரின் \\”சஸ்பென்ஸ்\\” தகவலால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்களாம்..
மாநாட்டில் பேசிய மாவட்ட தலைகளோ, எங்க செல்வாக்கு என்ன தெரியுமா... நாங்க பணம் கேட்டால் என்ன தப்பு... கொள்ளையடிக்க நாங்க வரல... என கொந்தளித்தார்களாம்.. சில யூடியூபர்களை கடுமையாக சாடிய சிலர், கேப்டனின் லஞ்ச, ஊழல் ஒழிப்பு கொள்கையில் நாம ஒருபோதும் விலகிடக் கூடாது என மேடையிலே அண்ணியாருக்கு அன்பு வேண்டுகோள் வைத்தாராம்.. அதோடு கேப்டனின் வாரிசை புகழ்ந்துபேசியதால் மைத்துனர் முகம் வாடினாராம்..
இதனிடையே அண்ணியாரின் ‘‘சஸ்பென்ஸ்” காரணம் குறித்து முரசு வட்டாரத்தில் முணுமுணுப்பு எழுந்துள்ளதாம்.. கூட்டணி விவகாரத்தில் முந்திரி கொட்டை மாதிரி நாம எதுக்கு அறிவிக்கணும், இனி சாமர்த்தியம்தான் நமக்கு தேவை என்றதற்கான காரணம் நிர்வாகிகள் பலருக்கும் புரியலையாம்.. எண்ணிக்கைதான் பிரச்னை என்றாலும், எந்த எண்ணிக்கை என்ற குழப்பம்தான் அண்ணியாரின் சஸ்பென்ஸ் அறிவிப்புக்கு முக்கிய காரணமாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கருடன் கூட்டணி வைத்துவிடக் கூடாது என நடிகரின் கட்சி நிர்வாகிகள் கோயிலுக்கு சென்று வேண்டிக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குக்கர்காரர் கூட்டணிக்கு வந்து விடக் கூடாதுன்னு நடிகரின் கட்சிக்காரங்க கடவுளிடம் வேண்டும் அளவுக்கு வந்து விட்டார்களாம்.. சேலத்துக்காரர் தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது; தாங்கள் இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என குக்கர்காரர் கூறுவதைக் கேட்டும், எங்களுடன் கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சியில் பங்கு என நடிகர் கூறுவதால், ஹனிபீ மாவட்டத்தைச் சேர்ந்த அவரது கட்சிக்காரர்கள் ரொம்பவே கவலையில் இருக்கிறார்களாம்..
சொந்த ெசல்வாக்கை இழந்துவிட்ட குக்கர்காரர், இன்னும் தன்னை பெரிய தலைவராகவே காட்டிக் கொண்டு வருகிறாராம்.. கிடைக்கிற ஓட்டுகள் எல்லாம் தன்னால் தான் கிடைத்தது என்றும் வாய் கூசாமல் பேசுவார்.. நம்ம கட்சியில் உள்ள நிர்வாகிகளை மதிக்க மாட்டார். குறிப்பாக நமக்கு தொகுதி கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, குக்கர்காரருடன் கூட்டணி வைத்துவிடக் கூடாது என சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகரின் கட்சி நிர்வாகிகள் கோயிலுக்கு சென்று வேண்டிக் கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மருமகளுக்கு எதிராக மகளை களம் இறக்கப் போறாமே தைலாபுரத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நீயா, நானா? என்ற விவகாரத்தில் தைலாபுரத்துக்காரரை, பனையூர் சன் பின்னுக்கு தள்ளிட்டு போயிட்டாராம்.. சிபிஐ வழக்குகளில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக ஆரம்பத்தில் இருந்தே மலராத கட்சியுடன் மிகவும் நெருக்கமாகிட்டாராம் சன்..
இதையெல்லாம் தெரிந்த தந்தை பொதுக்குழுவை கூட்டியதோடு, கூட்டணிக்கு அவசரப்பட வேண்டாம் என்றிருந்த நிலையில் தான் இலைக்கட்சி தலைவரை பார்த்து இணைந்திட்டாராம் மகன்.. நிர்வாகம் என்றால் என்னன்னு தெரியாதவருன்னு வறுத்தெடுத்த இலைக்கட்சி தலைவரை சந்தித்ததை நினைத்து கட்சிக்காரங்க ரொம்பவே சிரியாய் சிரிக்காங்களாம்.. அதோடு இலைக்கட்சி தலைவரை சந்திக்க தைலாபுரத்துக்காரர் தரப்பினர் தொடர்ந்து நேரம் கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம்..
இவரிடம் தொண்டர்கள் இல்லாத நிலையில் தட்டிக்கழித்த இலைக்கட்சி தலைவர், சன்னிடம் கூறி கூட்டணியை உறுதிபடுத்திக்கிட்டாராம்.. இதனை சற்றும் எதிர்பாராத தைலாபுரத்துக்காரர் தரப்பு ரொம்பவே அப்செட் ஆகிட்டாங்களாம்.. இந்நிலையில் பாட்டாளிகளால் பலமுறை வெற்றி பெற்ற இலைக்கட்சி தலைவர் இவ்வளவு அவமரியாதை செய்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியலையாம்..
இதனால் வரும் தேர்தலில் இடைப்பாடியில் இலைக்கட்சி தலைவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி தோற்கடிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்திருக்காங்களாம்.. இத்தொகுதியில் 1.40 லட்சம் ஓட்டுகள் தங்களிடம் இருப்பதை இலைக்கட்சி தலைவர் மறந்துவிட்டார் என காட்டத்தோடு இருக்காங்களாம்.. அதுவும் மகனுக்கு மந்திரம் ஓதிய மருமகளையும் அரசியலை விட்டே ஒதுக்கவும் தைலாபுரத்துக்காரர் திட்டம் வச்சியிருக்காராம்..
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, செய்யாறு ஆகிய தொகுதியில் மருமகள் போட்டியிட திட்டம் இருக்குதாம்.. எந்த தொகுதியில் களம் இறங்கினாலும் அங்கு அவரை தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியாக இருக்காராம்... அதற்காக பாட்டாளியின் புதிய செயல் தலைவரான மகளை களம் இறக்கப் போறாராம் தைலாபுரத்துக்காரர்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


