கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல; அது தலைமுறைகளின் தலைவிதியை மாற்றியமைக்கும் பேராற்றல் கொண்டது என்பதற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்ச்சனா ஜெய்சாலின் வாழ்க்கை வரலாறு ஓர் அற்புதச் சான்றாகும். வறுமையைக் கடந்து கல்வியால் தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட தந்தையின் உத்வேகத்தில், கிராமப்புறக் குழந்தைகளுக்கு மலிவான கட்டணத்தில் தரமான கல்வியையும், பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தையும் வழங்கி ‘ஷிக்ஷா சாத்தி’ (Shiksha Saathi) என்ற அமைப்பின் மூலம் இவர் கல்விப் புரட்சி செய்து வருகிறார்.
அர்ச்சனா ஜெய்சாலின் தந்தை ஜகதீஷ் ராம், உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் குடும்பப் பொறுப்புகளையும் சகோதரிகளின் திருமணச் செலவுகளையும் ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் தனது 17-வது வயதில் ரிக்ஷா ஓட்டத் தொடங்கிய அவர், உழைப்பிற்கு இடையிலும் படிப்பைக் கைவிடாமல் பகலில் உழைத்து இரவில் படித்து பட்டப்படிப்பை முடித்தார். வறுமையின் மத்தியிலும் அவர் வரைந்த ஓவியங்கள், விளம்பரப் பலகைகளில் எழுதிய எழுத்துகள் ஆகியவை குடும்பத்தைக் காப்பாற்ற உதவின. பின்னர் சக தொழிலாளி ஒருவரின் ஆலோசனையால் ரயில்வே பணிக்கு விண்ணப்பித்து வேலையும் பெற்றார். தான் சந்தித்த வறுமையும் சிரமங்களும் தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், வாரணாசிக்குக் குடும்பத்தை அழைத்துச் சென்று நல்வழிகாட்டினார். ஆனால், அர்ச்சனா சிறு வயதாக இருக்கும்போதே அவர் எதிர்பாராதவிதமாக காலமானார்.
தந்தையின் மறைவுக்குப் பின் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்த ஒரே வருமான ஆதாரமான ரயில்வே வேலையை அர்ச்சனாவின் தாயாரால் ஏற்க முடியாமல் போனதால், குடும்பம் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அந்தச் சூழலில், அர்ச்சனாவின் மூத்த சகோதரி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றியதுடன், மற்ற பிள்ளைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொண்டார். குடும்பத்தினரின் இத்தகைய தியாகத்தாலும் ஆதரவாலும் அர்ச்சனா பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலையும் முதுகலைப் பட்டமும் பெற்றார். கல்லூரிப் பேராசிரியராக வேண்டும் என்ற அவரது கனவு, சரியான வழிகாட்டலும் வாய்ப்புகளும் கிடைக்காததால் நிறைவேறாவிட்டாலும், தன்னைப்போல வாய்ப்புகள் மறுக்கப்படும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஆழமாகப் பதிந்தது.
தன் உறவினர்களின் குழந்தைகளைச் சந்தித்தபோது, கிராமப்புறப் பள்ளிகளில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்கூட அடிப்படைப் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்படுவதை அர்ச்சனா கவனித்தார். பள்ளிகளில் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற முடியாத சூழலும், நகரங்களுக்குச் சென்று தனிப்பயிற்சி (Coaching) பெற பண வசதியும் போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையும் அவர்களுக்குத் தடையாக இருந்தன. இந்த நிலையை மாற்ற விரும்பிய அர்ச்சனா, 2022-ஆம் ஆண்டு ‘யுவர் கோச்சிங்’ என்ற பெயரில் ஒரு சிறிய முயற்சியைத் தொடங்கி, 2023-இல் ‘ஷிக்ஷா சாத்தி’ என்ற அமைப்பாக முறைப்படி பதிவுசெய்தார். இதன்படி 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி நேரத்திற்குப் பின் கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. குடும்பத்தின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப மாதம் ₹100 முதல் ₹1,100 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது; வறுமையின் காரணமாகக் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளுக்கும் தடையின்றி இலவசமாகக் கல்வி கற்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
வகுப்பறைகளில் வெறும் பாடம் நடத்துவதுடன் நின்றுவிடாமல், கல்வியின் தரத்தை உறுதி செய்ய அர்ச்சனா மற்றொரு முக்கிய முடிவை எடுத்தார். ஒருமுறை ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் ஒருவரின் அடிப்படை அறிவிலேயே குறைபாடு இருப்பதை உணர்ந்த அவர், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தீர்மானித்தார். இதற்காக கிராமப்புற இளம் பெண்களுக்கு ஆறு மாத கால கற்பித்தல் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளுக்குத் தெளிவான கல்வி கிடைப்பதுடன், வேலைவாய்ப்பின்றித் தவித்த கிராமப்புறப் பெண்களுக்குச் சொந்த ஊரிலேயே மதிப்பிற்குரிய வேலையும் சுயசார்பு வருமானமும் கிடைக்கிறது.
இதற்குச் சிறந்த உதாரணமாக, 19 வயதில் ஆசிரியராகச் சேர்ந்த நீது என்ற பெண், ஆரம்பத்தில் இந்தி வழியில் படித்ததால் ஆங்கிலம் கற்பிக்கத் தயங்கினாலும், 7 மாத கால தீவிரப் பயிற்சிக்குப் பின் தன்னம்பிக்கையுடன் பாடம் நடத்தி வருகிறார். தற்போது மாதம் ₹6,000 முதல் ₹7,000 வரை ஈட்டி, குடும்பத்தினரை எதிர்பார்க்காமல் தனது சொந்த உயர்கல்விச் செலவுகளைத் தானே கவனித்துக் கொள்கிறார். அதேபோல், கணிதப் பாடத்தைக் கண்டு பயந்து விலகிய ரியா என்ற 10 வயது மாணவி, இங்குள்ள ஆசிரியர்களின் தனிப்பட்ட கவனிப்பால் கணிதத்தை விரும்பிப் படித்து, எதிர்காலத்தில் தானும் ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற பெரிய கனவோடு படித்து வருகிறார்.
தற்போது அர்ச்சனாவின் இந்த முயற்சி உத்தரப் பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் பரவி, 78-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்கள் மூலம் 7,650-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வியையும், 740-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சியையும் வழங்கிப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிக் ஷா ஓட்டிக்கொண்டே படித்து வாழ்க்கையை உயர்த்திய தந்தையின் வழியில், அர்ச்சனா ஜெய்சால் உருவாக்கி வரும் இந்த கல்விச் சேவை, பொருளாதாரச் சூழலால் எந்தவொரு குழந்தையின் கனவும் முடங்கிவிடக் கூடாது என்பதை உலகிற்கு உணர்த்துகிறது. ஒரு கிராமத்தில் தொடங்கும் சிறிய கல்வி மையம், குழந்தைகளுக்கான அறிவுக் கதவுகளையும் பெண்களுக்குமான பொருளாதாரச் சுதந்திரத்தையும் திறந்து, ஒட்டுமொத்தச் சமூகத்தின் எதிர்காலத்தையே வெளிச்சமாக்கும் என்பதற்கு அர்ச்சனாவின் இந்தப் பயணம் ஒரு மகத்தான சான்றாகும்.
- ஆ. கவின்


