குழந்தைகள் தின விழா: டார்ஜிலிங் மலை ரயிலில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இலவசப் பயணம்!!
டார்ஜிலிங்: குழந்தைகள் தின விழாவையொட்டி டார்ஜிலிங் மலை ரயிலில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்கின்றனர். இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற சிறுவர், சிறுமிகளுக்கு சிலிகுரியில் இருந்து ரோங்டாங் நிலையம் வரை பாரம்பரிய மலை ரயில் பயணத்தை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது. மலைகளின் அழகையும், ரயில் பயணத்தின் மகிழ்ச்சியையும் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், மகாத்மா காந்தி டார்ஜிலிங்கிற்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் சதாப்தி ஊர்வலத்தின் ஒரு பகுதியாகவும், ரோங்டாங் பகுதியைச் சேர்ந்த பிற குழந்தைகளுக்கும் இந்த வார இறுதியில் ரயில் பயண அனுபவம் வழங்கப்பட உள்ளது.