Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரியில் தொடரும் பருவமழை சாலைகள், குடியிருப்புகளில் அபாயகர மரங்களை வெட்டி அகற்றப்படுமா?

*பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள அபாயகர மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோர் துவங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்கின்றன.

இந்த பருவமழைகளை நம்பி மலை காய்கறி விவசாயம், தேயிலை விவசாயம் நடைபெறும். இதுதவிர குடிநீர் தேவைகள், மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளில் நீர் இருப்பு அதிகரிப்பு ஆகியவையும் பருவமழைகளை நம்பியே உள்ளன. மேலும் பருவமழை சமயங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு, குடியிருப்புகளின் மீது மரங்கள் விழுதல் போன்ற பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக சாலைகள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி காணப்படும் ராட்சத கற்பூர மரங்கள், சீகை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுகின்றன.

மேலும் வாகனங்கள் மீதும், குடியிருப்புகள் மீதும் விழுந்து பொருட்சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பழமை வாய்ந்த கற்பூர மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பருவமழையின் போது மரங்கள் விழுந்து உயிர் பலி ஏற்படுவது தொடர் கதையாகவே உள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பள்ளிகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இருப்பினும் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் அபாயகர மரங்கள் அதிகளவு உள்ளன. இந்தாண்டுக்கான முன்கூட்டியே துவங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று ஊட்டியில் மரம் விழுந்து சுற்றுலா வந்த கேரள சிறுவன் உயிரிழந்தார்.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகள், குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழு அமைத்து எங்கெங்கெல்லாம் அபாயகரமான மரங்கள் உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி அவற்றை பருவமழை தீவிரமடையும் முன்பு அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.