Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

டாய்ரா!

ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனிநபருக்கு நேரும் குற்றம் மட்டுமல்ல; அதைத் தொடர்ந்து ஒரு குடும்பமும், சமூகமும், சட்ட அமைப்பும் எதிர்கொள்ளும் பிரச்னையாக மாறுகிறது என்பது சட்டத்திற்கே அப்பாற்பட்ட சிந்தனைதான். மேக்னா குல்சார் இயக்கியுள்ள ‘டாய்ரா’, பிருத்விராஜ் சுகுமாறன், கரீனா கபூர், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் பெண்கள் பாதுகாப்பு, காவல்துறையின் பொறுப்பு, நீதித்துறை மீதான நம்பிக்கை, சமூகத்தின் கோபம், பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என பல்வேறு கேள்விகளை முன்வைக்கிறது.

படத்தின் கதை, ஒரு பெண் காணாமல் போவதில் தொடங்குகிறது. குடும்பம் காவல்துறையை அணுகுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவம், குற்றவாளிகள் மீதான நடவடிக்கை என கதை நகர்கிறது. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா என்பதோடு படம் நிற்கவில்லை. “அந்தப் பெண்ணை குற்றம் நடப்பதற்கு முன்பே பாதுகாக்க முடியாதது ஏன்?” என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

அதை ‘‘ காவலர்கள், அவர்கள்

கடமையைச் செய்ய அவர்களுக்கு என்ன கஷ்டம்’’ என்னும் கேள்வி அழுத்த

மாகவே கேட்கப்பட்டது சபாஷ்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும்போது, அவர்கள் எங்கு செல்கிறார்கள், எந்த நேரத்தில் வெளியே இருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் போன்ற கேள்விகள்தான் முதலில் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக அவளது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது தீர்வாகிவிட முடியாது. ஒரு பெண் ஆபத்தில் இருப்பதாக புகார் அளிக்கும்போது, அதை உடனடியாகவும் தீவிரமாகவும் எடுத்துக்கொள்வதே பாதுகாப்பின் முதல் படி. ஆனால் பல காவலர்களின் அலட்சியம்தான் இங்கே நடக்கும் பல குற்றங்களுக்கு முதல் காரணமாக அமைந்துவிடுகிறது.

அதேபோல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் போராட்டம் குற்றம் நடந்தவுடன் முடிந்து

விடுவதில்லை. காவல்துறை விசாரணை, மருத்துவப் பரிசோதனை, நீதிமன்ற விசாரணை, சமூகத்தின் பார்வை என பல கட்டங்களில் அவள் மீண்டும் மீண்டும் அந்தத் துயரத்தை எதிர்கொள்ள

வேண்டியிருக்கிறது. “அவள் ஏன் அங்கே சென்றாள்?”, “அந்த நேரத்தில் ஏன் வெளியே இருந்தாள்?” போன்ற கேள்விகள் குற்றவாளிகளை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டவரையே விசாரிக்கும் மனநிலையை உருவாக்குகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கும் போராட்டம் இருக்கிறது. மகளை இழந்த துயரத்துடன், வழக்கு எப்போது முடியும் என்ற காத்திருப்பும், உண்மை வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களை அழுத்துகிறது. எனவே, நீதியின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சட்ட உதவி, தகவல், மனநல ஆதரவு மற்றும் மரியாதையான அணுகுமுறை கிடைக்க வேண்டியது அவசியமாகிறது.

இதற்கு நடுவில் படம் இன்னொரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறது - ‘உடனடி நீதி’ என்ற பெயரில் காவல்துறை சட்ட நடைமுறையைத் தாண்டிச் செல்லமுடியுமா?

பொதுவாகவே பெண்கள் மீதான வன்கொடுமை குற்றங்களைச் சந்திக்கும் போது சமூகத்தில் கோபம் உருவாவது இயல்பானது. வழக்குகள் நீண்ட காலம் இழுபறியாகும்போது அந்தக் கோபம் மேலும் அதிகரிக்கும். அப்போது என்கவுன்டர் போன்ற நடவடிக்கைகள் சிலருக்கு உடனடி நீதியாகத் தோன்றலாம். ஆனால் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே தண்டனை வழங்கும் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கேள்வி அங்கே எழுகிறது.

இதனால்தான் ‘டாய்ரா’வில் காவல்துறை அதிகாரிகளின் பார்வை, அவர்களுக்குள்ளான மோதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருபுறம் குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வேண்டும் என்ற அணுகுமுறை; மறுபுறம் சட்டத்தின் வழியாகவே நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு. இந்த இரண்டுக்கும் இடையிலான முரண்பாட்டை படம் ஆராய்கிறது.

இறுதியில், பெண்கள் பாதுகாப்பு என்பது கடுமையான சட்டங்கள் கொண்டு வருவதால் மட்டும் முழுமையடையாது , காவல்துறையின் அணுகுமுறை, நீதித்துறையின் செயல்பாடு, ஊடகங்களின் பொறுப்பு, குடும்பத்துக்குக் கிடைக்கும் ஆதரவு, சமூகத்தின் மனநிலை என அனைத்தும் மாற வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றத்துக்குப் பிறகு குற்றவாளியைத் தண்டிப்பது மட்டும் நீதி அல்ல. அந்தக் குற்றம் நடக்காமல் தடுப்பதும், குற்றம் நடந்த பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணை

மரியாதையுடன் நடத்துவதும், அவளது குடும்பத்துக்கு துணையாக இருப்பதும், சட்டத்தின் மீது நம்பிக்கையை உருவாக்குவதும் நீதியின் ஒரு பகுதிதான்.

அந்த வகையில், ‘டாய்ரா’ ஒரு குற்றக் கதையைத் தாண்டி, “பெண்கள் உண்மையாகப் பாதுகாப்பாக வாழக்கூடிய

சமூகத்தை உருவாக்க நாம் இன்னும் என்ன மாற்ற வேண்டும்?” என்ற கேள்வியை நம்முன் வைக்கிறது.

- மகளிர் மலர் குழு