அமராவதி: மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள முரசு புயல் ஆந்திராவில் கரையை கடந்து வருகிறது. புயலின் வெளிப்பகுதி நிலப்பரப்பிற்குள் நுழைந்த நிலையில், கண் பகுதி கரையை கடந்துவருகிறது. அடுத்த 2 மணிநேரத்திற்கு புயல் கரையை கடக்கும் நிகழ்வு நீடிக்கும். ஓங்கோலுக்கு 20 கி.மீ. கிழக்கு தென்கிழக்கிலும், பாபட்லாவிற்கு 60 கி.மீ. தெற்கு தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது. நெல்லூருக்கு 110 கி.மீ. வடக்கு வடகிழக்கிலும், மசூலிப்பட்டினத்திற்கு 130 கி.மீ. தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 2 மணிநேரத்தில் நெல்லூர் - நரசப்பூர் இடையே ஓங்கோல் அருகே கரையை கடக்கும். கரையை கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். ஒன்று முதல் ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து தாழ்வான பகுதிகளை மூழ்கடிக்கலாம். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்கிறது. முன்னதாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயலின் நகரும் வேகம் குறைந்தது
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் 21 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது


