டிட்வா புயல்: இலங்கையில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 410 ஆக உயர்வு
கொழும்பு: டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 410ஆக உயர்ந்துள்ளது. கொழும்பில் பெய்த கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மண்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் , மழை வெள்ளம், மண்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 336 பேரை காணவில்லை. டிட்வா புயல் தாக்கி 4 நாட்களாகியும் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.565 வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,441 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரு வாரமாக மழை பாதிப்பு தொடர்கிறது.