Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆந்திர மாநிலம் நெல்லூர்-நரசப்பூர் இடையே ‘முரசு’ புயல் கரையை கடந்தது: மணிக்கு 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது

திருமலை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ‘முரசு’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திர கடலோர பகுதியான நெல்லூர்- நரசாப்பூர் இடையே தீவிர புயலாக மாறி நேற்று அதிகாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்கு ஓங்கோல் அருகே முரசு புயல் கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100-110 கிமீ ஆகவும்,அவ்வப்போது 120 கிமீ வேகத்திலும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலால் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 5 மணி வரை அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டம், கோத்தப்பட்டினம் பகுதியில் 164.25 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் பிரகாசம் மாவட்டம் என்ஜி படுவில் 114.19 மி.மீ., பாபட்லா மாவட்டம் சிராலாவில் 99.59 மி.மீ., த்ரோவகுண்டாவில் 91.95 மி.மீ., மேற்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூரில் 79.34 மி.மீ., டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம், மல்கிபுரத்தில் 74.75 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது. அடுத்த 2 நாட்களில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புயலின் தாக்கத்தால், பல ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா, ஓங்கோல் மற்றும் கூடூர் ரயில் பாதையில் ரயில்களின் இயக்கத்தை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மொத்தம் 29 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை ரயில் நிறுத்தி வைப்பு

முரசு புயலால் ஐதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு நேற்று காலை 8 மணிக்கு வர வேண்டிய சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், சிராலா- ஓங்கோல் இடையே அம்மனப்ரோலு அருகே அதிகாலை 1.46 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயிலில் உள்ள பயணிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அமித் ஷா உறுதி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று காலை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மாநிலத்தில் முரசு புயலால் ஏற்பட்ட தாக்கம், அதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, சேதங்களை விவரித்து, அர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக ஆந்திராவுக்கு ஒரு குழுவை அனுப்பிய உள்துறை அமைச்சருக்கு, முதல்வர் சந்திரபாபு நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அமித் ஷா தனது எக்ஸ் பக்க பதிவில் கூறுகையில், ‘ஒன்றிய அரசிடமிருந்து அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடுவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

30 ஆயிரம் ஹெக்டேர் பாதிப்பு

ஆந்திராவில் முரசு புயலால் 15 மாவட்டங்களில் 30,661 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதில் கிருஷ்ணா, பாபட்லா மற்றும் நந்தியால் மாவட்டங்கள் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நெல், பருத்தி மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் அதிகம் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.

மார்க்காபுரம் மாவட்டம், டோர்னாலாவில் மணிக்கு 107 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10,805 பேர் மீட்கப்பட்டு 171 மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளுக்காக 11 என்.டி.ஆர்.எப் மற்றும் 13 எஸ்.டி.ஆர்.எப் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.