ஆந்திராவில் புயலால் மலைக்கிராம சாலைகள் சேதம் உடல்நிலை பாதித்த மகளை 14 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற தாய்
திருமலை: ஆந்திராவில் புயலால் மலைக்கிராம சாலைகள் சேதமான நிலையில் உடல்நிலை பாதித்த மகளை, அவரது தாய் 14 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், எஸ்.கோட்டா மண்டலம் கிரிஷிகர பஞ்சாயத்து தாராபர்த்தியின் புறநகர்ப் பகுதியான பல்லபுடுங்கடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜன்னி சுகுரம்மா.
இவரது 12 வயது மகள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவரது கணவர் கண்ணய்யாவும் உடன் இல்லை. அர்னாப் புயலின் தாக்கத்தால் சிறிய தார் சாலையும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால், அவ்வப்போது வந்து சென்ற ஆட்டோக்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதனால் வேறு வழியின்றி, அந்த தாய் தனது மகளை நேற்று முன்தினம் தோளில் சுமந்துகொண்டு அவளை காப்பாற்றுவதற்காக கிராமத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சமவெளிப் பகுதியான டப்பகுண்டாவிற்கு நடந்தே சென்றார்.
அங்கிருந்து, அவர் தனது மகளை ஒரு ஆட்டோவில் எஸ்.கோட்டா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். டப்பகுண்டாவிலிருந்து, அவர் மீண்டும் தனது மகளை தோளில் சுமந்துகொண்டு கிராமத்தை அடைய 7 கிலோமீட்டர் நடந்தே சென்றார். அதன்படி 14 கி.மீ. தூரம் அந்த தாய் தனது மகளை தோளில் சுமந்து சென்றுள்ளார். டப்பகுண்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற சிறிய கிராமங்களில் வாகனப் போக்குவரத்திற்கு வசதியாக சாலையை சீரமைத்துத் தருமாறு பழங்குடியினர் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


