சைபர் கிரைம் புகாரில் வாலிபரை பிடிக்க வந்தபோது போலீஸ் தள்ளியதில் மூதாட்டி பலி? உறவினர்கள் குற்றச்சாட்டு
கருங்கல்: சைபர் கிரைம் புகாரில், வாலிபரை பிடிக்க வந்த போலீசார் தள்ளியதில், மூதாட்டி கீழே விழுந்து இறந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு பாம்புரி வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆன்டனி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சந்திரகலா. இவர்களது மகன் சாகித் ஜெட்லி (20). நாகர்கோவிலில் உள்ள ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு பஸ்சில் செல்லும் போது திங்கள் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண், நாகர்கோவிலில் பியூட்டீசியன் படிக்க வந்துள்ளார்.
இவர் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் அதை மறைத்து, சாகித் ஜெட்லியுடன் பழகியதாக கூறப்படுகிறது. இருவரும் நெருங்கி பழகியது, 2 வீட்டாருக்கும் தெரிய வந்து கண்டித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலி அருகே தங்கி இருந்துள்ளனர். இதற்கிடையே மனைவியை காணவில்லை என பெண்ணின் கணவர் புகாரின்படி இரணியல் போலீசார் விசாரணை நடத்தி, சாதிக் ஜெட்லியுடன் சென்ற அந்த பெண்ணை மீட்டனர். அவர் கணவருடன் செல்ல மறுத்து, உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாதிக் ஜெட்லியின் சான்றிதழ், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இருந்தன. அதை அவரது கணவர் பறித்து வைத்துள்ளார். இதை திருப்பி தருமாறு சாதிக் ஜெட்லி கேட்டும் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சாதிக் ஜெட்லி, அந்த பெண்ணுடன் பழகிய போது எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பினார். இதை பார்த்த பெண்ணின் கணவர் புகாரின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து சாதிக் ஜெட்லியை கைது செய்வதற்காக, நேற்று காலை அவரது வீட்டுக்கு எஸ்.ஐ. தலைமையில் 3 போலீசார் சென்றுள்ளனர்.
மப்டியில் இருந்ததால் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் சென்றுள்ளார். பின்னர் போலீசார் வீட்டுக்குள் சென்று சாதிக் ஜெட்லியை பிடித்தனர். அப்போது அவர் டவல் மட்டும் அணிந்து இருந்தார். வீட்டில் இருந்தவர்கள், ஏமாற்றி காதலித்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்காமல், இவரை ஏன் கைது செய்ய வந்தீர்கள் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது சாதிக் ஜெட்லியை விடாமல், அவரது பாட்டி சூசைமரியாள் (80) தடுத்துள்ளார்.
அங்கு நின்ற போலீசார் அவரை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் அவர் கீழே விழுந்துள்ளார். இந்த களேபரத்தில், போலீஸ் பிடியில் இருந்து சாதிக் ஜெட்லி தப்பினார். போலீசார் விரட்டிச்சென்றபோது ஒரு பள்ளத்தில் குதித்து தலைமறைவானார். இந்நிலையில், சூசைமரியாளை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார். இது குறித்து சாதிக் ஜெட்லியின் தாயார் சந்திரகலா ஆன்லைனில் அளித்த புகாரில் மாமியார் சூசைமரியாள், போலீசார் தள்ளி விட்டதில் இறந்துவிட்டார். தள்ளிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* போலீசை பயமுறுத்த பொய்யான தகவல்
குமரி மாவட்ட காவல்துறை அலுவலக செய்தி குறிப்பில், கடந்த 28ம் தேதி, குமரி மாவட்டத்தை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் மனைவியின் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டும், உறவினருக்கு அனுப்பியும், பெண்ணை மிரட்டியதாகவும் வந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சாதிக் ஜெட்லி (20) மற்றும் நெய்யூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மீது 78 (2), 351 (ii) பி.என்.எஸ். மற்றும் 66 E, 67, 67A IT சட்டப்பிரிவு மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரை தேடி சென்றபோது அவர் தப்பிவிட்டதால் போலீசார் திரும்பினர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை பாதுகாக்கவும், போலீசை பயமுறுத்தும் நோக்கத்துடனும் போலீசார் மூதாட்டியை தாக்கியதாக உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி வருகிறார்கள். தவறான செய்தியை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
* காவல் நிலையத்தில் நீதிபதி ஆய்வு
சாதிக் ஜெட்லி மாயமானது குறித்து, அவரது தாயார் சந்திரகலா, இரணியல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக விசாரணைக்காக, நீதிபதி அமீர்தீன் நேற்று மதியம் திடீரென கருங்கல் காவல் நிலையம் வந்தார். லாக் அப் அறையில் யாராவது இருக்கிறார்களா என்பதை சோதனை செய்தார். பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். அரை மணி நேரத்துக்கு பின், நீதிபதி புறப்பட்டு சென்றார்.
