கட்டாக்கில் இன்று முதல் டி20; நம்பர் 1 இந்தியாவை சமாளிக்குமா தென் ஆப்ரிக்கா?: வெற்றிபெற இரு அணிகளும் தீவிரம்
கட்டாக்: இந்தியா, தென்ஆப்ரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பாரபதி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் டி20 போட்டி நடக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்காவும், ஒருநாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றி இருப்பதால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்குகின்றன. இதற்கு முன்பு இந்த மைதானத்தில் இந்தியாவுடன் மோதிய 2 டி20 போட்டிகளிலும் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றிருப்பதால், அதிக உத்வேகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது. கில் மற்றும் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள நிலையில், பும்ராவும் அணியில் சேர்ந்திருப்பதால் இந்திய அணி புது தெம்புடன் காட்சியளிக்கிறது.
அதேபோல் நோர்ட்ஜே, மில்லர் ஆகியோரும் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால், அவர்களின் வருகை தென் ஆப்ரிக்க அணிக்கு கூடுதல் பலம். இந்நிலையில் போட்டி நடைபெறும் கட்டாக்கில் இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பாரபதி ஸ்டேடியமானது பொதுவாக பேட்டிங்கிற்குச் சாதகமாகவே இருக்கும். இதனால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் அதிக ஸ்கோர் அடிக்க கூடும். இது போன்ற மைதானத்தில் அபிஷேக் சர்மா, கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்டியா, மார்க்ரம், மில்லர், டி காக் போன்றோர் அதிரடியாக ஆடக் கூடும் என்பதால் ரசிகர்களுக்கு இன்றைய போட்டியில் சிறப்பான விருந்து காத்திருக்கிறது.
போட்டியில் தொடக்கத்தில், புதிய பந்து வீசும்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் சிறிதளவு கைகொடுக்கும் என்பதால், அந்த முதல் சில ஓவர்களை மட்டும் பேட்ஸ்மேன்கள் சமாளித்துவிட்டால், அதன் பிறகு அத்தனையும் சரவெடி, வாண வேடிக்கை தான். இந்த மைதானத்தில் இதுவரை தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய இரண்டு டி20 போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியுள்ளதால் ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்க சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி போராடும். அதேபோல் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் அதற்கு பழிதீர்க்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா களம் காணும் என்பதால் இன்றைய போட்டியில் கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
அபிஷேக்-கில்தான் துவக்க ஜோடி; கேப்டன் சூர்யகுமார் பேட்டி:
இதற்கிடையே இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், ``சஞ்சு சாம்சனை பொறுத்தவரை அவர் அணிக்குள் வந்தபோது முன்வரிசையில் பேட்டிங் செய்தார். தொடக்க ஆட்டக்காரராக மிகவும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் சுப்மன் அவருக்கு முன் இலங்கைத் தொடரில் விளையாடியிருந்தார். எனவே, அவர் அந்த இடத்தைப் பிடிக்க தகுதியானவர். எனவே அவருக்குத்தான் நாங்கள் தொடக்க வீரருக்கான வாய்ப்பை வழங்குவோம். அதே வேளையில் சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருக்கிறார். அதனால் நாங்கள் அவருக்கும் தொடர்ந்து வாய்ப்பு வழங்குவோம். உண்மையில் எந்த ஒரு வீரரும் 3 முதல் 6 வரை எங்கும் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது நல்லது. எனவே, நான் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சொன்ன ஒரு விஷயம் இதுதான். தொடக்க வீரர்களைத் தவிர, அனைவரும் மிகவும் நெகிழ்வானவர்களாக இருக்கவேண்டும். எந்த இடத்திலும் விளையாடுவதற்கு சாம்சன் தன்னை தகவமைத்துக் கொள்வார்’’ என்றார்.
முக்கிய வில்லன் `பனிப்பொழிவு’
இந்தப் போட்டியில் `பனிப்பொழிவு’ முக்கிய வில்லனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பனி பெய்யும் என்பதால், 2வது இன்னிங்சில் பந்து வீசுவது பவுலர்களுக்குக் சற்று கடினமானதாக இருக்கும். இதனால் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். எனவே இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தது 210 முதல் 220 ரன்கள் எடுத்தால் மட்டுமே அந்த அணியால் வெற்றிபெற போராட முடியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.