கரெண்ட் பில் அதிகமாக வந்தா கம்ப்ளைண்ட் பண்ணுங்க... மின்வாரியம் தகவல்
சென்னை: வீடுகளுக்கு மின்கட்டணம் அதிகமாக வந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக கூறிவருகின்றனர். அதேபோல் தமிழ்நாடு முழுவதுமே பலர் தங்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத மின் கட்டண விகிதம் கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறியுள்ளனர். 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டணமே வராது.
அதேபோல் 200 யூனிட் வரை வருபவர்களுக்கும் பெரிய அளவில் கட்டணம் இருக்காது. ஆனால் 300 யூனிட் அல்லது அதற்கு மேல் போகும் போது கணிசமாக கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கிறது. குறிப்பாக 60 நாட்களுக்கு 400 யூனிட் வரை ரூ.4.95 கட்டணமும், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65-ம், 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ.8.80-ம், 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ரூ.9.95-ம், 801 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05-ம், 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் 60 நாளில் எடுக்க வேண்டிய ரீடிங் 5 நாள் தள்ளி போகும் போது, மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துவிடுகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் ஒரு சில வீடுகளுக்கு திடீரென அதிகமாக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: எந்த வீடுகளுக்கும் கூடுதல் மின் கட்டணம் வந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம்.
அதில் தவறு ஏதும் நடந்துள்ளதா என்று அதிகாரிகள் கண்டறிவார்கள். இதில் ஊழியர்களின் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை கடுமையான எடுக்கப்படும். அதேபோல், தமிழ்நாட்டில் 3.46 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். சில இடங்களில் புகார் வரும்போது தவறு யாரால் ஏற்படுகிறது என்று கண்டறியப்படும். அதை அதிகாரிகள் சரி செய்து கொடுப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.