Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நடப்பு 2026-27ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்பு:பணிகளை விரைவுபடுத்த மின்வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நடப்பு 2026-27ம் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகளை விரைந்து முடிக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இந்த நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இணைப்பு வழங்கத் தயார் நிலையில் 48,944 விண்ணப்பங்களும், புதிதாகப் பெறப்பட்ட 1,056 விண்ணப்பங்களும் என மொத்தம் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் உள்ளன.

இதையடுத்து, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுக்கும் வட்டார வாரியாக இலக்குகள் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கும் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் விவசாய மின் இணைப்புகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மின் இணைப்புக்கான மதிப்பீடு தயாரித்தல், தேவையான மின்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், மோட்டார் மற்றும் பம்ப் செட் பொருத்துவதற்கான தயார் நிலையை உறுதி செய்தல் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தேவையான மின்சாதனப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், 7 நாட்களுக்குள் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி அனைத்து இணைப்புகளையும் உரிய காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய இயக்குநர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.