‘‘சின்னஞ்சிறிய மாநிலத்தில் பரிதாப நிலைக்கு சென்று கொண்டிருக்காமே இலைக்கட்சி..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘சின்னஞ்சிறிய மாநிலமான புதுவையில் இலை கட்சி, இரண்டு முறை ஆட்சி செய்தது.. இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆர் ஆட்சிக்கு முன்பே இங்கு இலை கட்சி ஆட்சி அமைத்தது.. அந்த அளவுக்கு வலுவாக இருந்த இலை கட்சி தற்போது சுருங்கி வருவது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கு.. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணில் இலை கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் லாட்டரி கட்சியும் இணைய வேண்டும் என உள்துறை பவர்புல் மேன் கண்டிஷன் போட்டுள்ளாராம்.. வரும் சட்டமன்ற தேர்தலில் லாட்டரி கட்சியும், தேசிய ஜனநாயக கட்சியில் இணைந்தால் அதிமுகவுக்கு இன்னும் சீட் குறைத்து தான் கொடுக்கப்படும் நிலை ஏற்படும் என மலராத கட்சி வட்டாரத்தில் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனராம்.. லாட்டரி கட்சிக்கு மூன்று சீட்டும், இலை கட்சிக்கு 2 சீட்டுமே ஒதுக்கப்படுமாம்.. இலை கட்சிக்கு 2 சீட் கொடுத்தால் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என இலை கட்சியின் சீனியர் தலைவர்கள் கூறி வர்றாங்களாம்.. கடந்த தேர்தல் போன்று 5 தொகுதிக்கு குறைவாக கொடுத்தால் ஏற்க மாட்டோம். அதற்காக நிற்காமலேயே இருந்து விடுவோம் என பதிலுக்கு மிரட்டி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சீட்டுக்காக மலராத கட்சியில் குஸ்தி போட்டவங்க கரன்சி சப்ஜெக்ட்டை கையில் எடுத்ததும் மவுனமாகி விட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி இருக்கு.. இதில், தற்போதைய நிலையில் 9 தொகுதியில் இரட்டை இலை வென்றுள்ளது. ஒரு தொகுதி மலராத கட்சி வசம் இருக்கு.. இந்நிலையில், வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில், பாதிக்கு பாதி, அதாவது 5 தொகுதியை நமக்கு கேட்டுப்பெற வேண்டும் என மலராதக் கட்சி ஒத்தக்காலில் நிற்கின்றாராம்.. ஆனால், இலை தரப்பில் வெறும் 2 சீட் மட்டும்தான் தருவோம் என கறாராக உள்ளனராம்.. இதற்கிடையில், இலைக்கட்சி 9 முறை வெற்றிபெற்ற மேட்டுப்பாளையம் தொகுதியையும் மலராத கட்சி குறி வைக்கிறதாம்.. அதிமுக தரப்பில் இத்தொகுதியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லாவிட்டாலும், மலராத கட்சி சார்பில் இத்தொகுதியில் போட்டியிட குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறதாம்.. மான்செஸ்டர் வடக்கு மாவட்ட மலராதக்கட்சி பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் விக்னேஷ் மற்றும் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், தற்போதைய தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில இணை அமைப்பாளருமான சங்கீதாவுக்கு இடையே குஸ்தி நடந்து வருகிறதாம்.. யாராக இருந்தாலும், துட்டு நிறைய கொடுத்தால்தான் சீட் கிடைக்கும்னு கட்சியின் மேலிடம் சொல்லி விட்டதாம்.. கரன்சி சப்ஜெக்ட்டை கையில் எடுத்ததும் இருதரப்பும் மவுனமாக இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எம்பி தேர்தலில் இலவு காத்த கிளியாக இருந்த விஜயமான பெண்மணி இந்த முறை எப்படியும் போட்டிப்போட்டே ஆகவேண்டும்னு காய் நகர்த்துகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடை கோடி மாவட்டத்தில் கதர் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயமானவர் கடைசி நேரத்தில் மலராத கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் பெரிய செல்வாக்கும், அளவுக்கான பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் என்று நம்பி இலவு காத்த கிளியாக இருந்தவர் தற்போது மீண்டும் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காய்களை நகர்த்தி வருகிறாராம்.. தான் ஏற்கனவே களம் கண்ட ‘கோடு’ தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டாம், பதிலுக்கு ‘கோயில்’ தொகுதியில் போட்டியிடலாமானு ஆலோசித்து வருகிறாராம்.. இரு தொகுதிகளிலும் களம் காண கட்சிக்குள் நிகழும் போட்டிகள் அந்த அளவு உள்ளதால் இந்த முறை தொகுதி மாறி சீட் பெற்றாக வேண்டும், தனக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதால் இந்த முறை எப்படியேனும் பயன்படுத்தியாக வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியாக உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பத்து நாளில் அய்யா பாமக ஆர்டர் வரப்போகுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தைலாபுரத்து தோட்டத்துக்காரருக்கும், அவரது சன்னுக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டு போச்சு.. இருவரும் தங்களிடம் தான் கட்சி இருக்கிறது என மார்தட்டி வர்றாங்க.. முதல் ரவுண்டில் தேர்தல் ஆணையம், மகனை தலைவருன்னு சொல்லிட்டு.. ரெண்டாவது ரவுண்டில் தந்தை நீதிமன்றத்தை நோக்கி போனவுடன், அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு நாங்கள் தலைவர் பதவியை வழங்க முடியாதுன்னு கை விரிச்சிட்டாங்க.. அதோடு 3வது ரவுண்டுக்கு தந்தை தரப்பினர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று கட்சியும், சின்னமும் எங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், கட்சியின் நிறுவனருக்கு அதற்கான தார்மீக உரிமை இருக்குதுன்னும் கேட்டிருக்காங்க.. இந்த ரவுண்டில் தந்தை தரப்புக்கு கேட்டது கிடைக்குமுன்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.. இதனை எதிர்த்து மகன் தரப்பில் தேர்தல் ஆணையத்தை இன்னும் டச் பண்ணலையாம்.. அப்படி செய்தால் அவர்கள் சிக்கலில் சிக்கிக்கொள்வார்கள் என்பது அவர்களுக்கு தெரியுமாம்.. இதனால் அமைதி காத்து வருவதாகவும் சொல்றாங்க.. அதையும் தாண்டி ரெண்டு பேரும் ஒரு சின்னத்திற்கு உரிமை கோரினால், மாம்பழம் முடக்கப்படும் நிலையும் ஏற்பட்டிருக்காம்.. இதனால தந்தை தரப்பினர் மிகுந்த உஷாராக இருக்காங்களாம்.. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே, அய்யா பாமக என்ற கட்சியை பதிவு செஞ்சிட்டாங்களாம்.. இது தொடர்பான பரிசீலனை முடிந்து தயாரா இருக்குதாம்.. இன்னும் பத்து நாளில் அதற்கான ஆணை, தந்தை தரப்பின் கைக்கு வந்துவிடுமாம் என்ற மகிழ்ச்சியோடு இருக்காங்களாம் தந்தை தரப்பினர்.. அது சரி... தந்தை வேறு சின்னத்தை ஒதுக்கீடு பெற்று சென்று விட்டார்.. எனவே, பழத்தை எங்களுக்கே கொடுங்கன்னு மகன் கேட்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்றாங்க.. ஆனால் பீகார் தேர்தலில் பொய்யான தகவலை கொடுத்து, சின்னத்தை பெற்று ஏமாற்றியதால் தான் வேறு சின்னம் பெற்ற தகவலையும் கையில் வச்சிருக்காங்களாம்.. இதனால் இம்முறை தந்தை தரப்பினரிடம் இருந்து யாரும் ஏமாற்ற முடியாதாம்.. அதே நேரத்தில், வரும் தேர்தலில் தோட்டத்துக்காரர் தேர்தலில் நின்று அங்கீகாரம் பெறுவதோடு, கட்சியையும் மீட்பாருன்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

