Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

*வஞ்சிரம் கிலோ ரூ.850க்கு விற்பனை

கடலூர் : வரத்து குறைவால் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பொதுமக்கள் கூட்டமும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் அக்கரை கோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். கடலூர் பகுதியில் இருந்து செல்லும் மீனவர்களால் கொண்டுவரப்படும் மீன்கள், கடலூர் துறைமுகத்தில் விற்பனை செய்யப்படும்.

இதனால் அதிகாலை முதலே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடல் துறைமுகத்திற்கு வந்து மீன்களை வாங்கி செல்வர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை வாங்க வருவர்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கம் போல அதிகாலையில் மீன் விற்பனை தொடங்கியது. ஆனால் வழக்கத்தை விட குறைவான அளவு மீன் வரத்து இருந்தது. ஞாயிற்றுக்கிழமையில் வழக்கமாக வரும் படகுகளின் எண்ணிக்கை யை விட சுமார் 70 படகுகள் துறைமுகத்துக்கு வராததால், மீன் வரத்து குறைவாக இருந்தது.

மேலும் நேற்று பங்குனி உத்திர திருவிழா என்பதால் பொதுமக்களும் குறைந்த அளவிலேயே மீன்கள் வாங்க வந்திருந்தனர்.

இதன் காரணமாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்கப்படும் வஞ்சிரம் மீன் 850 ரூபாய்க்கும், 300 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சங்கரா மீன் 450 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பாறை மீன் 450 ரூபாய்க்கும், பன்னி சாத்தான் 450 ரூபாய்க்கும், கனவாய் 300 ரூபாய்க்கும், இறால் 300 முதல் 400 ரூபாய்க்கும், நெத்திலி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகம் காரணமாக பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. அவர்களும் விலை ஏற்றத்தால் குறைந்த அளவிலேயே மீன்களை வாங்கி சென்றனர்.