Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இருளில் மூழ்கிய கியூபா - மின் கட்டமைப்பு முற்றிலும் செயலிழந்ததால் 1 கோடி மக்கள் தவிப்பு..!

ஹவானா: கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பு (Power Grid) முழுமையாக செயலிழந்ததால், அங்குள்ள சுமார் 10 மில்லியன் (1 கோடி) மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். கியூபா நாட்டின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, கியூபாவில் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மின்சார விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் ஹவானா உட்பட நாட்டின் பெரும்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் அந்நாட்டின் பல தெருக்களில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் விளக்குகள் மட்டுமே வெளிச்சத்தை அளித்தன. மிகவும் பழமையான மின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் எரிபொருள் விநியோகத்தைத் துண்டிக்கும் வகையில் அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் தடை போன்றவற்றின் விளைவாக, கியூபா பல மாதங்களாக மணிக்கணக்கிலும், சமீப வாரங்களாக நாட்கணக்கிலும் நீடிக்கும் தீவிர மின்வெட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு நேற்று நண்பகலில் முற்றிலும் செயலிழந்தது. இதன் காரணமாக தலைநகர் ஹவானா உட்பட நாடு முழுவதும் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. மேலும் அங்கு நிலவும் கடும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கியூபாவின் தேசிய மின்சார நிறுவனம் (UNE), நாட்டின் மின் கட்டமைப்பை படிப்படியாக சீரமைக்க அவசரகால "மைக்ரோசிஸ்டம்ஸ்" முறையைப் பயன்படுத்தி வருகிறது. மருத்துவமனைகள், உணவு உற்பத்தி நிலையங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு மட்டும் தற்காலிகமாக மின்சாரம் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஹவானாவின் மொத்த மின் தேவையில் வெறும் 1% மட்டுமே தற்போதைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் (UNE) தெரிவித்துள்ளது.

பழைய உள்கட்டமைப்பு, கடுமையான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகிய மூன்று முக்கிய காரணிகளின் கூட்டு விளைவே தற்போதைய பாதிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் கியூபாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மின் உற்பத்தி நிலையமான 'அன்டோனியோ கைடெராஸ்' (Antonio Guiteras) திடீரென செயலிழந்ததே இந்த ஒட்டுமொத்த மின்தடைக்கு காரணமாகும்.