கிரிப்டோகரன்சி மூலம் பதுக்கிய ரூ.4,189 கோடி ‘கறுப்பு பண’ சொத்து பறிமுதல்: 44,000 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
புதுடெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சி மூலம் பதுக்கப்பட்ட ரூ.4,189 கோடி மதிப்பிலான கறுப்புப் பணத்தை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். நாட்டின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யவும், நிதி மோசடிகளைத் தடுக்கவும் ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2002ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களை முடக்கவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரவும் அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நிதி மோசடிகள், அந்நியச் செலாவணி விதிமீறல்கள் மற்றும் கறுப்புப் பணப் புழக்கம் ஆகியவற்றை அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைப் பயன்படுத்தி பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் தொடர்பாக அமலாக்கத்துறை மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, இதுவரை ரூ.4,189.89 கோடி மதிப்பிலான கறுப்புப் பணம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முறையான தகவல்கள் இன்றி மறைமுகமாக கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்ட 44,057 நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ‘இந்திய நிதி அமைப்பில் நடைபெறும் மோசடிகள் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் ஒன்றிய அரசின் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.