Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காலக்கொடுமை

எஸ் ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மத்தியபிரதேசம் மாநிலங்கள், அந்தமான் நிக்கோபர் தீவுகள், கோவா, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து முடிந்த மாநிலங்களில் மொத்தம் 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஸ்ஐஆர் பணிகள் தொடங்குவதற்கு முன்பு மேற்கண்ட மாநிலங்களில் மொத்தம் 50.90 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்தப்பணி முடிந்த பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 44.40 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதன்படி 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 2.89 கோடி, தமிழ்நாட்டில் 97.38 லட்சம், குஜராத்தில் 73.7 லட்சம், மேற்கு வங்கத்தில் 58 லட்சம், மத்திய பிரதேசத்தில் 42.7 லட்சம், சத்தீஸ்கரில் 27 லட்சம், கேரளாவில் 24 லட்சம், ராஜஸ்தானில் 42 லட்சம், புதுச்ேசரியில் 1.03 லட்சம், கோவாவில் 1.42 லட்சம், லட்சத்தீவுகளில் 1200 என்ற அளவில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அவசரக்கோலத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகளால் அடித்தட்டு மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர். குறிப்பாக இடம் பெயர்ந்து வாழும் விளிம்புநிலை மக்களே, தங்களது ஜனநாயக உரிமையை பெருமளவில் இழக்க நேரிடும். எனவே இந்த பணிகளை அதிக நாட்கள் எடுத்து மிகுந்த சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.

எஸ்ஐஆர் பணிகள் நடந்த அனைத்து மாநிலங்களிலும் மக்களின் மனக்குமுறலாகவும் இது ஒலித்தது. இது ஒருபுறமிருக்க, ஒன்றியத்தை ஆளும் பாஜ அரசு, தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக்கி எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் இதனை கடுமையாக மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் பரவலானது. தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் போன்ற மாநிலங்கள் இதற்கு ஆதாரமாக பல்வேறு தகவல்களையும் வெளியிட்டது.

இந்தநிலையில் அசாம் மாநில பாஜ தலைவர் திலிப்சைகியா, தாமரைக்கு வாக்களிக்காத வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். சுமார் 60 தொகுதிகளில் பாஜவுக்கு வாக்களிக்காத 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வாக்காளர்களின் பெயர்களை கணக்ெகடுத்து நீக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த வீடியோவை எதிர்க்கட்சிகள் வைரலாக்கி, தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளனர். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், விதிகளை மீறி இடமாற்றம் செய்யப்படுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அசாமில் தற்போது பாஜ அரசே ஆட்சியில் அமர்ந்துள்ளது. அங்கு என்ஆர்சி நிலை (தேசிய குடிமக்கள் பதிவேடு) நிலுவையில் உள்ளதால் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. இதில் 11 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்தில் இருந்து மென்மையான போக்கை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கும் நிலையிலும், பாஜ தலைவரின் உத்தரவால் இந்த நீக்கம் நிகழ்ந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரான காலக்கொடுமை என்பது நடுநிலையாளர்களின் குமுறல்.