Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும் அபாயம்: ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்

வாஷிங்டன்: அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 11வது நாளாக ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. அங்குள்ள ஏவுகணை ஏவுதளங்கள், டிரோன் தளங்கள், ராணுவ கட்டளை மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடல்சார் ராணுவ வசதிகள் உள்ளிட்ட இலக்குகள் துல்லியமாக குறிவைத்து தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டளை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஈரானின் தாக்குதல் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க ஈரானும் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தூதரக பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால் மோதல் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு குறித்த அச்சமும் நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தி, அமைதி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட நடுநிலை நாடுகள் மூலமாக தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை 91 டாலராக உயர்வு;

ஈரானின் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் எதிரொலியாக எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 91 டாலருக்கும், அமெரிக்காவில் பெட்ரோலின் விலை ஒரு கேலனுக்கு சராசரியாக 4 டாலராகவும் உயர்ந்தது.

இதுவரை ரூ.3.15 லட்சம் கோடிக்கு மேல் செலவு;

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை தோராயமாக சுமார் ரூ.3.15 லட்சம் கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இத்தகவலை அமெரிக்க செனட் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு முன்பாக நடைபெற்ற காரசாரமான விசாரணையின் போது ஹெக்செத் வெளியிட்டார். இதில் ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகளும் அடங்கும்.

இதுபற்றி எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் செனட்டர் பாட்டி முர்ரே, இந்த நடவடிக்கை “மற்றொரு முடிவில்லாத போருக்கு வழிவகுக்கும்” என்று விமர்சித்தார். மேலும், உள்நாட்டு பொருளாதார சவால்கள் மற்றும் பணவீக்கத்திற்கு இடையே, போருக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.