Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மணிமகுடம்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால், பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து, கிரிக்கெட் அதிகம் பேர் விரும்பும் விளையாட்டாக மாறி விட்டது. அதுவும் ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் வந்த பிறகு கேட்கவே வேண்டாம். மேற்கத்திய நாடுகளில் கால்பந்து கிளப் போட்டிகளை போல, ஐபிஎல் தொடரிலும் ஒவ்வொரு டீமுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2008ல் துவங்கிய முதல் ஐபிஎல் போட்டி, தற்போதைய 18வது சீசன் வரை ஆண்டுக்காண்டு மெருகேறிக் கொண்டே செல்கிறது.

இம்முறை கடந்த மார்ச் 22ம் தேதி துவங்கிய 18வது ஐபிஎல் சீசன், நேற்று முன்தினம் இரவு வெற்றிகரமாக முடிவடைந்தது. பொதுவாக, இந்தியாவில் மழை பொழியும் அக்டோபர், நவம்பர் மாதங்கள் தீபாவளி சீசன் என்றால், வெயில் வெளுத்து வாங்கும் கோடைக்காலத்தில் ஐபிஎல்லும் மற்றொரு தீபாவளி பண்டிகை போலவே கோலாகலமாக போற்றப்படுகிறது. இம்முறை சீசன் தொடங்கியபோது அனைவரின் கவனத்தை ஒரு அணிதான் அதிகம் ஈர்த்திருந்தது. அது ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

இந்த அணியைப்பற்றி பலர் மீம்ஸ்களை தெறிக்க விட்டனர். ‘அண்ணே... ஒரு டீ போடுண்ணே...’ என ஒரு இளைஞன் கேட்க, ‘கப்பா... டம்ளரா’ என டீக்கடைக்காரர் கேட்க, ‘அண்ணே.. நான் ஆர்சிபி பேன்.. கப்பு வேணாம்ணே...’ என்றெல்லாம் மீம்ஸ் போட்டு கழுவி கழுவி ஊற்றினர். அதே நேரம், ‘அந்த அணிக்காக கோஹ்லி, ஆரம்பத்துல இருந்து விளையாடுறாருப்பா... அவருக்காகவாவது அந்த அணி ஒரு கப் ஆவது வாங்க வேண்டும்’ என்றும் பலர் கூறி வந்தனர்.

புள்ளிகள் பட்டியலில் டாப் வரிசையில் ஆர்சிபி வந்ததை பார்த்ததும், பலர் தங்களையே கிள்ளிப் பார்த்துக் கொண்டனர். ஆனால், லீக், பிளே ஆப் சுற்று, இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடி, பல கோடி ரசிகர்களின் மனதை கவர்ந்து சாம்பியன் ஆனது ஆர்சிபி. அந்த அணிக்கு கேப்டன் ரஜத் படிதார் தான்... ஆனால், அவர் போட்டிருக்கிற ஜெர்ஸி, விராத் கோஹ்லி உடையது என்பது போல, ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்சிபி அணியின் அவதார் போலவே கோஹ்லியை பார்த்தனர்.

எப்போதுமே யாரோ பந்து வீசி, யாரோ கேட்ச் பிடித்து எதிரணி வீரர் ஆட்டமிழந்தாலும், தன்னால்தான் அது நிகழ்ந்தது என்பது, கூச்சலிட்டபடியே, காற்றில் தாவி குதித்து ஓடி வருவார் விராத் கோஹ்லி. 3 முறை இறுதிப்போட்டி வரை சென்ற தோற்ற பின், தனது 18வது ஐபிஎல்லில் ஆர்சிபி சாம்பியன் ஆனதும் கண்ணீரோடு அவர் தரையை முத்தமிட்டார். முகம் சிவக்க எழுந்த அவரை பார்த்த ரசிகர்கள் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் அன்பை பெற்ற அணியாகவே இம்முறை திகழ்ந்தது ஆர்சிபி அணி. சும்மாவா... அந்த அணி சிக்சர், பவுண்டரி அடிக்கும்போதும், விக்கெட் வீழும்போது இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் எழுந்து நின்று கத்தியதை பார்க்கும்போது, ‘அடேங்கப்பா... இதுக்கு நம்ம ரசிகர்களே பரவாயில்லையே’ என எண்ணத்தோன்றியது.

தென்ஆப்ரிக்காவின் 360 டிகிரி பிளேயர் ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் என கோஹ்லியின் முன்னாள் ஆர்சிபி டீம் மேட்களும் போட்டியை காண வந்து கோஹ்லியை உற்சாகப்படுத்த தவறவில்லை.டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு ‘பை... பை’ கூறி விட்ட கோஹ்லியின் கிரிக்கெட் சாம்ராஜ்யத்தில் இதுவும் ஒரு மணி மகுடமே... அதே நேரம் அனல் பறக்கும் கோடைக்காலத்தில் வயது வித்தியாசமின்றி ரசிகர்களை கொண்டாட்ட மழையில் நனைய வைத்த ஐபிஎல் வெற்றிகரமாக விடை பெற்று விட்டது. இம்முறையும் ரசிகர்களின் மனதை வென்று விட்டது.