திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் ஒதப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ ஆய்வு செய்தார். அப்போது பயிர்க்கடன் தள்ளுபடி பணிகளின் முன்னேற்றம், அனைத்து வகையான கடன் வழங்தலின் முன்னேற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை, தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எய்துவதற்கான முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
சங்கத்தின் சேவைகளை பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் முழுமையாக பயன்படுத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசின் வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை காலவரையறைக்குள் நிறைவேற்றவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து மீன் வளர்ப்பு கடன் வழங்கப்பட்ட பயனாளியை நேரில் சந்தித்து, அவரது மீன் வளர்ப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் கடன் தொகையின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது திருவள்ளூர் சரக துணைப்பதிவாளர் (பொ) சி.அமுதா, சங்கத்தின் கள அலுவலர் சாந்தி, செயலாட்சியர் பூபாலன், செயலாளர் பூபதி இருந்தனர்.


