Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை கோட்டை நோக்கி விவசாயிகள் பேரணி: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தவெக அரசை கண்டித்து மறியல்

சென்னை: தேர்தல் வாக்குறுதிப்படி, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை கோட்டை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் திடீரென திரண்டு வந்து பேரணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தவெக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் தடுத்ததால், மறியலில் ஈடுபட்டனர். தவெக வாக்குறுதியில், விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தனர். தவெக ஆட்சி அமைத்த நிலையில், தங்களது பயிர்கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் பயிர் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்யாமல் சொற்பமான அளவிலேயே கடனை தவெக அரசு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நேற்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக புதுப்பேட்டை சித்ரா தியேட்டர் அருகே ஒன்று திரண்டனர்.

கோட்டையை நோக்கி பேரணியாக நடந்து சென்றனர். தவெக அரசை கண்டித்து முழக்கமிட்டு கொண்டே பேரணியாக நடந்து சென்றனர். எழும்பூர் எல்ஜி ரவுண்டானா அருகே விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி கூறுகையில், ‘‘விவசாயிகளை எந்த வகையிலும் விட்டு கொடுக்க மாட்டேன், எந்த பிரச்னையாக இருந்தாலும் துறை அமைச்சரையோ அல்லது என்னையோ எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து சந்திக்கலாம் என்று பிரசாரத்தின்போது விஜய் கூறினார். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் விவசாயியாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்றெல்லாம் கூறி எங்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஆனால் வெற்றி பெற்ற பின்பு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் கோரிக்கைகளை தவெக அரசு நிறைவேற்றாத பட்சத்தில், பட்ஜெட் கூட்டத்தின் போது சட்டமன்ற வளாகம் முன் விவசாயிகள் போராட்டம் நடைபெறும். பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

* தேர்தல் பிரசாரத்தின்போது, விவசாயிகளை எந்த வகையிலும் விட்டு கொடுக்க மாட்டேன், எந்த பிரச்னையாக இருந்தாலும் துறை அமைச்சரையோ அல்லது என்னையோ எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து சந்திக்கலாம் என்று விஜய் கூறினார்.

* அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் விவசாயியாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்றெல்லாம் கூறி வாக்கு சேகரித்தார்.