Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்னைக்கும் வாழைக்கும் தோதான ஊடுபயிர்!

கடந்த இதழில் வெளியான தென்னைக்குள் வாழை, வாழைக்குள் உளுந்து என்ற கட்டுரையின் தொடர்ச்சி... ``தென்னைக்கு 24 அடி இடைவெளி விட்டு நட்டதன் மூலம் ஒரு ஏக்கரில் 76 கன்றுகள் நட்டேன். தென்னை நடவுக்கு குறைந்தது 3 அடி ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட குழிகளைத் தோண்ட வேண்டும். அதில் 1 அடி மணல் நிரப்ப வேண்டும். 1 அடிக்கு இலை தழையும், மீதமுள்ள 1 அடிக்கு தொழுஉரமும் நிரப்பி நீர்ப் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் கழித்த பின்பு அந்தக் குழியின் ஆழம் 1.5 அடியாக இருக்கும். அதில் தென்னங்கன்றுகளை வைத்து மண் நிரப்பி நீர் பாய்ச்ச வேண்டும். வண்டுகள் வேரை அரிக்காமல் இருக்க வேப்பம்புண்ணாக்கு சேர்க்க வேண்டும். பின்பு பூக்கள் பூக்கும் வரை, அதாவது நட்டு 3 ஆண்டுகள் வரை வாரத்திற்கு ஒருநாள் நீர் பாய்ச்சினால் போதுமானது. அதன்பின்பு பூத்து காய் வைக்கும்பொழுது அதிக அளவு தண்ணீர் தேவைப்படும்.

தென்னை மரங்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் 5 கிலோ தொழுஉரம் வைத்து நீர் பாய்ச்சினால் நல்ல பலன் கிடைக்கும். ஆட்டுச்சாணம் பயன்படுத்தும்போது பூக்கள் நன்கு பூத்து காய் காய்க்கும். பூக்கள் உதிராது. தற்போது நான் சாகுபடி செய்துள்ள தென்னை மரங்களுக்கு இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துவதால் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. நல்ல முறையில் பராமரித்தால் 60 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். தென்னை நன்கு வளர்ந்த பின் மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக நிலக்கடலை, மஞ்சள், இஞ்சி போன்ற குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாம்.இப்போது இதில் ஊடுபயிராக சாகுபடி செய்த பூவன் ரக வாழை மரங்களும் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. வாழை நடவுக்கென தனியாக உழவு, பாத்தி அமைத்தல் போன்ற பணிகளைச் செய்யத் தேவையில்லை. லேசாக மண்ணைப் பறித்து, அதன் மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டு மண் அணைத்தாலே போதும். நிலத்தைத் தயார் செய்யும்போது 50 டன் எருவை அடியுரமாக இட்டு, மண்ணுடன் கலக்க வேண்டும். அப்படி செய்வதால் மண் வளம் கூடும். மகசூலும் பெருகும். இப்போது வாழை நன்றாக வளர்ந்து பச்சை கட்டி நிற்கிறது. இதை நாம் பராமரித்து வரும்போதே ஒரு வருமானம் பார்க்கலாம் என நினைத்து உளுந்து பயிரிட்டேன்.

உளுந்து 80 நாள் பயிர்தான். குறுகிய காலப் பயிர்தான் என்றாலும் வாழை நன்கு வளர்ந்து விட்டால் உளுந்தைப் பயிரிட முடியாது. அதனால் வாழைக்கன்று நடும்போதே உளுந்து விதைகளைத் தூவினேன். நான் எதிர்பார்த்ததை விட உளுந்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. இதன்மூலம் மிக நீண்ட நாள் பயிரான தென்னை, ஆண்டுப்பயிரான வாழை ஆகியவற்றில் இருந்து வருமானம் பார்ப்பதற்குள் 80 நாள் பயிரான உளுந்தைப் பயிரிட்டு குறுகிய நாளில் வருமானம் பார்த்துவிட்டேன். விவசாயிகள் இதுபோல் எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும், அவற்றுக்கு ஏற்றாற்போல் ஊடுபயிர்களை சாகுபடி செய்தால் கூடுதல் வருமானத்தை நிச்சயம் பார்க்கலாம். பிரதான பயிர்கள் வளர்ந்து விளைச்சல் கொடுப்பதற்குள் ஊடுபயிர் நமக்குத் தரும் வருமானம் பராமரிப்புக்கு உதவிகரமாக இருக்கும்’’ எனக் கூறியபடி புன்னகைக்கிறார் மதியழகன்.

தொடர்புக்கு:

மதியழகன்: 98655 21504.

கல்லூரி மாணவர்களுக்கு களப்பயிற்சி

மதியழகனின் சாகுபடி முறைகளை நேரில் அறிந்துகொள்ள வேளாண் கல்லூரி மாணவர்கள் அவரது வயலுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கிறார்கள். இதேபோல மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் 3வது ஞாயிற்றுக்கிழமையில் விவசாய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் பல்வேறு விவசாயிகளை அழைத்து வந்து மதியழகனின் பயிர் பராமரிப்பு முறைகள் விளக்கப்படுகிறது.

விதைத்தேர்வு

எந்தப் பயிராக இருந்தாலும், அதற்கு விதைதான் அடிப்படை. தரமான விதைதான் விளைச்சலை அள்ளித்தரும். உளுந்துக்கும் அப்படித்தான். உளுந்தை விதைப்பதற்கு முன்பு விதைகளில் காணப்படும் வெளிறிய மற்றும் திரட்சியற்ற விதைகளை நீக்கி விட வேண்டும். கருத்த, கரும்பச்சை நிறம் கொண்ட விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வீரியமான செடிகள் முளைத்து விளைச்சல் பெருகும்.