Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நீலிக்கண்ணீர்!

சிபிஎஸ்இ இந்த ஆண்டு 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்காக புதிய மின்னணு மதிப்பீட்டு முறையான திரைவழி மதிப்பீட்டு முறையை (ஓஎஸ்எம்) அறிமுகப்படுத்தியது. அதாவது, அனைத்து விடைத்தாள்களிலும் ஒரு ரகசியக் குறியீடு இடப்படும். அவை தேர்வு மையங்களிலிருந்து மண்டல அலுவலகங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அந்தத் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஒரு இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

மதிப்பீட்டாளர்கள் அந்த இணையதளத்திற்குள் நுழைந்து, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவால் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர். அதன்படி, சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சொந்தமான 98 லட்சத்திற்கு அதிகமான விடைத்தாள்கள் இந்த ஓஎஸ்எம் முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன. தொடர்ந்து மே 13ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

அப்போது தான் அனைவருக்குமான அதிர்ச்சி காத்திருந்தது. பல மாணவர்களுக்கு நம்பமுடியாத அளவில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்திருந்தன. ஒட்டுமொத்த தேர்ச்சி தேசிய அளவில் 85.29 சதவீதமாக இருந்தது. கிட்டதட்ட இது முந்தைய ஆண்டை விட 3.19% குறைவாகும். விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெற முயன்ற மாணவர்களுக்கு, மங்கலாக உள்ள விடைத்தாள்கள், விடுபட்ட பக்கங்கள் மற்றும் சிலருக்கு வேறொரு மாணவரின் விடைத்தாள்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் செலுத்தும் அமைப்பு செயலிழந்தது என குழப்பத்திற்கு மேல் குழப்பமாக நிகழ, இது நம்ம மதிப்பெண்தானா என்ற கேள்வியோடு மார்க் ஷீட்டுகளை ஏந்தி நிற்கும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த டிஜிட்டல் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்ட கோயம்ப் எஜூடெக் என்ற நிறுவனம், இதற்கு முன்பு குளோபரினா என்ற பெயரில் இயங்கியபோது, 2019ல் தெலங்கானா மாநிலத் தேர்வு முடிவுகளில் நடந்த பெரும் குளறுபடிகளில் சிக்கிய நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்திற்கு ஏன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் வழங்கியது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த ஆண்டு 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை வெறும் 5.3% ஆகக் குறைந்துள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்துத்தான் ஒரு மாணவரின் உயர்கல்வி மற்றும் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 75% மதிப்பெண் பெற முடியவில்லை எனில் ஐஐடி, என்ஐடி இரண்டிற்கும் செல்ல முடியாது.

அப்படி இருக்க சிபிஎஸ்இ திடீரென விடைத்தாள் திருத்துவதை ஓஎஸ்எம் முறைக்கு மாற்றப் போகிறோம் என ஏன் அறிவித்தார்கள், அதற்காக மதிப்பீட்டாளர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டதா என பல கேள்விகளை பெற்றோரும், கல்வியாளர்களும் முன்வைக்கின்றனர். இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘இந்த தொழில்நுட்ப கோளாறுகளுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்’’ என சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.

‘‘மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் யாரும் கருத்து கூறவேண்டாம். இந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்’’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். முறையான, முழுமையான பயிற்சி இல்லாமல், அவசர அவசரமாக தொழில்நுட்பத்தை புகுத்துகிறோம் என்ற பெயரில் மாணவர்களின் வாழ்க்கையில் சத்தமில்லாமல் சதியை நிகழ்த்திவிட்டு ஒன்றிய அரசு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது.