Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிரிமினல், குற்றவாளிகள் நிறைந்த தவெக அமைச்சரவை திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பேட்டி

சென்னை: திமுக சட்டத்துறை இணைச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி:

திமுகவின் மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியிலே திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற தவெக அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கின் மூலமாக நீதிமன்றத்தால் விஜய் அரசினுடைய மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது. இது பொய்யான வழக்கு, இந்த வழக்கில இவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டிய முகாந்திரம் இல்லை என்ற அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம், முதல் முறையாக இந்த குதிரைபேர சர்க்கார் மூக்கறுக்கப்பட்டுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணனை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யுங்கள், தவெகவில் இணைய பணம் தருகிறோம் என கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு. 6 மணி நேர விசாரணை இதற்காக தான் நடந்துள்ளதா? பாஜ எப்படி ஈடியை விட்டு மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்களோ அதேபோல தான் காவல்துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக அரசு செய்கிறது. இந்த உண்மை வெளிப்பட்ட உடன் பதறிப்போய் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஒரு பேட்டி கொடுக்கிறார். எங்களின் எம்.எல்.ஏ.வை ரவுடி என கூறுகிறார். இப்படி எல்லாம் சொல்லும் நிர்மல் குமார் மீது உக்கரபாண்டியன் என்பவர் உசிலம்பட்டியில் நில மோசடி செய்தார் நிர்மல் குமார் என 420 புகார் கொடுத்துள்ளார். இந்த 420 நிர்மல் குமார் வந்து திமுகவினுடைய எம்எல்ஏவை பார்த்து ரவுடி என்றெல்லாம் சொல்ல எந்த அருகதையும் இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு மக்களை கொன்று குவித்த கட்சி திமுக, கொன்று குவித்தவர் என்று எங்க தலைவருடைய பெயரை சொல்றார். இது எந்த விதத்தில நியாயம்? இப்படி அவதூறாக பேசக்கூடிய இந்த ஆதவ் அர்ஜுனாவை ஏன் கைது பண்ணாம இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறது காவல்துறை. யாரை ரவுடின்னு சொல்றாரு நிர்மல் குமார், நிதித்துறை அமைச்சராக இருக்கிறாரே மரிய வில்சன் அவர் மீது வீடு புகுந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கு உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்தில் அவரை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மினிஸ்டர் மேல பவுடர் குற்றச்சாட்டு இருக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மேல பாதிக்கப்பட்ட பெண் அளித்த குற்றச்சாட்டு இருக்கிறது. அமைச்சர் நிர்மல் குமார் மீது 420 புகார் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தலைமை அமைச்சராக இருக்கக்கூடிய விஜய் மீது குதிரைபேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறோம். இப்படி கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்டாக, குற்றவாளிகள் நிரம்பிய கேபினட்டாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இப்படிபட்ட தவெக அரசாங்கம் திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை.

மாற்றம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்து அதிமுக கட்சியில் இருப்பவரை தவெக கட்சியில சேர்க்கும் கட்சி மாற்றம் தான் நடந்துள்ளது. ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் தவெக. இவ்வாறு அவர் கூறினார்.