*போதை ஆசாமி கைது
கலசபாக்கம் : கடலாடி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணை அடித்துக் கொலை செய்ததாக கூலித்தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த காஞ்சி பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கருவேல காட்டில் மர்மமான முறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்ததை அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சி.நம்மியந்தலை சேர்ந்த வீரமணி என்பவர் கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், காஞ்சிப்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி வந்தவர் என்பதும், அவரது பெயர் முனியம்மாள்(45) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அதோடு துரிஞ்சாபுரம் அடுத்த பெரியகிளாம்பாடியை சேர்ந்த முருகன்(50) என்பவரது மனைவி என்பதும், 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து வந்த நிலையில், மனநலன் பாதிக்கப்பட்டு மேற்கண்ட காஞ்சி வட்டாரத்தில் சுற்றி வந்து, காலி மது பாட்டில்களை சேகரித்து விற்று பிழைத்து வந்ததாகவும் தெரிய வந்தது.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, முனியம்மாளுடன் வாலிபர் ஒருவர் பேசிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அவரை பற்றி விசாரித்த போது அவர் செங்கம் அடுத்த ஈடுகாத்தான் கிராமத்தை சேர்ந்த ராஜவேலு(32) என்பதும், கூலித்தொழிலாளியான அவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கலசப்பாக்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், முனியம்மாளை அடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். சம்பவத்தன்று காஞ்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர், சிறிது தொலைவில் காலி பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருந்த முனியம்மாளை கருவேல காட்டுக்கு அழைத்துச் சென்று ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதும், அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த ராஜவேலு அவரை அடித்துக் கொன்றதும் தெரிய வந்தது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கலசப்பாக்கம் போலீசார் ராஜவேலுவை கைது செய்து மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
