Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிராவல்ஸ் அதிபர் கொலையில் திடீர் திருப்பம்; மாயமான கள்ளக்காதலி தந்தை கதி என்ன?: 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

கோவை: டிராவல்ஸ் அதிபர் கொலையில் கோவையில் மாயமான கள்ளக்காதலியின் தந்தை என்ன ஆனார் என்பது குறித்து சிறையில் அடைக்கப்பட்ட 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்தவர் தியாகராஜன் (69). இவர், கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கோமதிக்கு நிலா மற்றும் சாரதா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சாரதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்த அவரது கணவர் குணவேலை கடந்த 2016ம் ஆண்டு தியாகராஜன் கொலை செய்தார்.

இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே கடந்த ஒன்ரை ஆண்டுக்கு முன்பு சாரதா துபாயில் ஓட்டல் வேலைக்கு சென்றார். அங்கு டிராவல்ஸ் தொழில் செய்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த சிகாமணி(47) என்பவருடன் சாரதாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அப்போது சிகாமணி தனது சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக ரூ. 5 லட்சத்தை சாரதாவிடம் வாங்கினார். அந்த பணத்தை திருப்பி கொடுப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிகாமணி, சாரதாவை தாக்கி உள்ளார். இதனையடுத்து சாரதா அங்கிருந்து கோவை திரும்பினார். பின்னர் சிகாமணி தன்னை தாக்கியது குறித்தும், வாங்கிய பணம் தராததும் குறித்தும் தனது தாயார் மற்றும் தியாகராஜனிடம் தெரிவித்தார். அவர்கள் சிகாமணியை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதற்கிடையே சிகாமணி கோவை வந்து சாரதாவுக்கு வீடு வாங்கி தருவதாக சமாதானம் பேசினார்.

அதன்படி, கோவை வந்த சிகாமணியை சாரதா உள்ளிட்டோர் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, துடியலூர் ஆகிய பகுதிகளுக்கு வீடு பார்க்க காரில் அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டில் வைத்து மது மற்றும் இறைச்சியில் வலி நிவாரணி மாத்திரைகள் கலந்து கொடுத்து கொலை செய்தனர். உடலை கார் டிக்கியில் வைத்து கரூர் பொன்னமராவதி அடுத்த கே.பரமத்தி என்ற பகுதிக்கு கொண்டு சென்று உடலை வீசினர்.

இந்த கொலை வழக்கில் போலீசார் தியாகராஜன் (69), பசுபதிபாண்டியன் கூட்டாளி புதியவன்(48), தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதி(53), மகள் நிலா(33), அவர்களின் உறவினர் சுவாதி (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சாரதாவை சரவணம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதியின் கணவர் சண்முகம் சில ஆண்டுகளாக காணவில்லை. அவரின் கதி என்ன? என்பதும் தெரியவில்லை. அவருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை பெற கைதான 6 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.