Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலியல் தொல்லையால் ஆத்திரம் சகோதரியின் கணவரை கொன்று புதைத்த திருநங்கை: பழநி அருகே பரபரப்பு

பழநி: பழநி அருகே தொழிலாளியை கொன்று புதைத்த திருநங்கை கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை தந்ததால் தங்கையின் கணவரை தீர்த்து கட்டியதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (32). கூலித்தொழிலாளி. மனைவி மாரியம்மாள் (27). மில் தொழிலாளி. இவர்களுடன் மாரியம்மாளுடன் பிறந்த திருநங்கை வைதேகி (42) வசித்து வந்தார். கடந்த ஏப். 29ம் தேதி வீட்டில் இருந்த முத்துசாமி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் பழநி தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர். மே 4ம் தேதி வைதேகியும் மாயமான நிலையில் வீட்டின் அருகில் மர்மமான மண் குவியல் இருந்தது.

தகவலறிந்து வந்த பழநி தாலுகா போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் தோண்டி பார்த்தனர். அங்கு முத்துசாமி கொலை செய்யப்பட்டு அவரது உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. போலீசார் இவ்வழக்கில் மாயமான வைதேகி மீது சந்தேகமடைந்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் எண் பெங்களூரு பகுதியில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் பெங்களூரூ சென்று அவரை பிடித்து வந்தனர். விசாரணையில், தங்கையின் கணவரான முத்துசாமி குடிபோதையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை கம்பியால் தாக்கி கொன்று வீட்டின் அருகில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வைதேகியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.