Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முக்கூடல் பகுதியில் மான்களை வேட்டையாடிய 3 பேர் கைது

*தலைமறைவான ஒருவருக்கு வலை

விகேபுரம் : முக்கூடல் பகுதியில் 2 மான்களை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திறுக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய், கடமான், ராஜநாகம், கருமந்தி உள்ளிட்ட அரிய வகை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு, குடிநீருக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது.

குறிப்பாக பாபநாசம் வனச்சரகத்தில் மான், கரடி, மிளா போன்ற வனவிலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சுற்றி திரிகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டி விடுவது தான் வனத்துறையினரின் முதன்மை பணி. இதற்காக வனப் பணியாளர்கள் ஆங்காங்கே நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் மலையடிவாரத்தில் வனவிலங்குகள் சுற்றி திரிவதை கண்டு கொள்வதில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட சிலர் மான், உடும்பு, மிளா போன்ற வனவிலங்குகளை அடிக்கடி வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் மட்டுமே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் பாபநாசம் வனச்சரகம் வெளிமண்டல பகுதியான மதுரா கோட்ஸ் முதல் தலையணை செல்லும் வழியில் புள்ளி மான் கறிகளை வெட்டுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாபநாசம் வனச்சரகர் குணசீலன் தலைமையில் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது பாபநாசம் பொதிகையடி பகுதியை சேர்ந்த முரளி மகன் மாணிக்கராஜி, கீழக்கொட்டாரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் சேர்ந்து முக்கூடல் தாளார்குளம் பகுதியில் உள்ள சுப்புக்குட்டி தேவர் மகன் ராமையா என்பவர் தோட்டத்தில் வைத்து 2 புள்ளி மான்களை வேட்டையாடியுள்ளனர்.

பின்னர் மான் கறிகளை சாக்கு பையில் எடுத்து கொண்டு பாபநாசம் தலையணை பகுதியில் மாரி மகன் சுரேஷ் என்பவருடன் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர் மான் கறிகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவர்களை அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் பாளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாகவுள்ள மேலக்கல்லூர் கிராமத்தை சேர்ந்த ராமையா என்பவரை தேடி வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘முக்கூடல் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் 2 புள்ளி மான்களை வேட்டையாடிய அவர்கள் சென்னை பதிவெண் கொண்ட காரில் அந்த 2 மான்களையும் பாபநாசம் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு மான் கறியை பங்கு போட்டுக் கொண்ட அவர்கள் விற்பனைக்காகவும் பதுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மான் கறியை பதுக்கி வைத்திருந்தவர்களை சுற்றி வளைத்தோம். பின்னர் அவர்களை பாபநாசம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினோம்.

இதில் அந்த கும்பல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை அடிக்கடி வேட்டையாடி வந்துள்ளனர். பின்னர் அங்கேயே பாகங்களை தனித்தனியாக வெட்டி எடுத்து விட்டு காரில் கடத்தி சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.

மீதமுள்ள பாகங்களை மலையடிவாரத்தில் புதைத்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை தேடி வருகிறோம். வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்துள்ளோம்’ என்றனர்.