தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பானுமதி (74). ஓய்வு பேராசிரியை. இவரது செல்போனுக்கு மே 18ம் தேதி தொடர்பு கொண்ட ஒருவர், மும்பை காவல்நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி, ‘‘உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய செல்போன் வாங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணை பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக உங்களை கைது செய்ய உள்ளோம்’’ என தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த பானுமதியிடம், கைதை தவிர்க்க குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.84.50 லட்சம் வரை பானுமதி அனுப்பி உள்ளார். அதன்பிறகு அந்த நபரிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. இதனையடுத்து தேனி சைபர் கிரைம் போலீசில், பானுமதி புகார் அளித்தார். தனிப்படையினர், டெல்லி துவாரகாவில் வசித்த அபிஜித்சிங் (36) என்பவரை கைது செய்து, ரூ.44 ஆயிரம், 5 செல்போன்கள், ஒரு லேப்டாப், 103 டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, 28 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும், அபிஜித்சிங் மற்றும் அவரது கூட்டாளிகளின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடிக்கு மேல் பணம் முடக்கம் செய்யப்பட்டது.


